கட்டுரையாளர் - ஜெரா
மிகவும் மென்மையானவர். கோபப்படாதவர். அதிர்ந்து பேசாதவர். மிகச்சிறந்த இராஜதந்திரி. நரித்தனமிக்கவர். சமாதான விரும்பி. வன்முறையை விரும்பாதவர். பொருளாதார மீட்பர் - எனப் பல அறிமுகங்களுக்குச் சொந்தக்காரரான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உண்மை முகம் அண்மையில் அம்பலமாகியிருக்கின்றது. அல்ஜசீரா தொலைக்காட்சியின் நேர்காணலுக்கு வலிந்து போய் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. இந்த நேர்காணலையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, அவரின் பழைய கோப்புக்கள் எல்லாம் கிளறப்படுகின்றன. தான் எதிரியாகக் கருதுகின்றவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் காட்சிகளைக் கண்குளிரப் பார்த்தவாறு, பிராண்டி குடிக்கும் மனநிலையுடையவராக ரணில் இருந்திருக்கிறார் என்கிற செய்திகூட அவரின் பழைய கோப்புக்களில் காணக்கிடைக்கிறது. எனவே இலங்கை வரலாற்றிலேயே மிகவும் மோசமான வக்கிரமுடையவர். வன்முறையாளர். கொடுங்கோலர் எனப் பல அறிமுகங்களையும் ரணில் விக்கிரமசிங்க பெறத்தொடங்கியிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா நேர்காணலுக்கு தெரிவானது எப்படி?
முதலில் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கான நேர்காணலுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவே அணுகப்பட்டிருக்கிறார். அவர் பின்னடிக்கவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை சந்தித்து, “எனக்குத் தமிழ் தெரியும். தமிழிலேயே கேளுங்க” என்று புலம்பெயர் தமிழர் ஒருவரை மடக்கிய திமிரிலும், ஜேர்மனியத் தொலைக்காட்சி நேர்காணலின்போது, “எங்களை இரண்டாம் தர மக்களாகக் கருதுகிறீர்களா”? என நேர்காணல் செய்தவரை எதிர்கேள்வி கேட்டு திணறவைத்த நம்பிக்கையிலும், அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு உடன்பட்டிருக்கிறார். என்ன கேள்விகேட்டாலும் தனக்குப் பதில்செல்ல இயலும், பதில் தெரியாவிட்டால் அந்தக் கேள்வியையே திருப்பிவிடும் புலமை தன்னிடம் உண்டு, சிக்கலான கேள்விக்கு ஆம் - இல்லை எனப் பதில்சொல்லி அந்தப் பேச்சினை அப்படியே நிறுத்திவைக்கும் திறன் தன்னிடம் உண்டு என்கிற நம்பிக்கைகள் அவரிடம் மலையளவுக்கு இருந்தன. அத்தோடு, இந்த நேர்காணலின்போது, பார்வையாளர்கள் பக்கமாக ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றக்கூடிய நபர்கள் வருவார்கள் என்பதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த நேர்காணலில் கலந்துகொள்வதன் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் தான் ஒரு அதிமேதாவி என்பதையும், தானே இலங்கைக்குத் தலைமையேற்கத் தகுதியானவன் என்பதையும் நிரூபிக்கலாம் எனக் கருதியிருந்தார். எனவேதான் தலைகீழாகக் குதிக்கத் தயாரானார் இந்த கோட்டாச்சாமி.
கேள்விகளால் தடுமாறிய ரணில்
மேற்குறித்த விதத்தில் எவ்விதமான தயார்படுத்தலுமின்றியே ரணில் விக்கிரமசிங்க நேர்காணல் மேடைக்கு ஏறினார். ஆனால் நேர்காணல் காண்பதற்காக ரணில் முன்பாக வந்தமர்ந்த மெஹ்தி ஹசன், ரணிலின் மொத்த ஜாதகத்தையும் கரைத்துக்குடித்தவராக இருந்தார். நேர்காணல் செய்வதற்கு முன்பே, ரணில் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது மெஹ்தி ஹசன் தொடர்பிலான குழு. ஜே.வி.பி.யினர்கூட மறந்து, கைவிட்டிருந்த படலந்த சித்திரவதைக்கூடம் குறித்த அறிக்கையோடு நேர்காணல் கூடத்திற்கு பார்வையாளர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அங்கே நேர்காணல் செய்த கேள்விகளும் சரி, பார்வையாளர் பக்கமிருந்து கேட்ட கேள்விகளும் சரி “நெத்தியடியாக” இருந்தன. ஆதாரபூர்வமானவையாக இருந்தன. மற்றையது ரணில் விக்கிரமசிங்க தனது வழமையான பதில்சொல்லல் பாணிகளை இங்கே பின்பற்ற முடியாதளவுக்கு அடுத்தத்தடுத்து கேள்விகள் விழுந்தன. எனவே திக்கமுக்காடிப்போனார். பதில் சொல்ல முடியாமல் பதறிப்போனார். ரணில் மேற்கொண்ட அனைத்து நரி வேலைகளுக்கும், பொருளாதார மீட்பர், சமாதானத்தில் காவலர் எனப் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்த உலகம், அவர் புரிந்த குற்றங்களைப் பட்டியலிட்டபோது, திருடனுக்கு தேள் கொட்டிய நிலைக்குள்ளானார். அம்பலமானார்.
தோண்டியெடுக்கப்பட்ட படலந்த விவகாரம்
உண்மையில் இந்த நேர்காணல், தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த இனப்படுகொலையைப் பற்றிய பேசுபொருளை கிளப்பியிருக்க வேண்டும். தமிழர்கள் தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக ஏன் சர்வதேச விசாரணையை, நீதியைக் கோருகின்றனர் என்பதன் நியாயத்தைப் பேசியிருக்க வேண்டும். ஆனால் இந்த நேர்காணல் படலந்த சித்திரவதைக் கூடம் பற்றிய மீள்கொணர்வையே ஏற்படுத்தியிருக்கிறது. படலந்த சித்திரவதைக்கூடத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினராக ஜே.வி.பி.யினர் இருப்பதனாலும், தற்போது ஆளுங்கட்சியாக ஜே.வி.பி.யினர் இருப்பதனாலும், அந்த விடயமே இப்போது முழுப்பேசுபொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
எங்கே இருக்கிறது படலந்த?
1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் உரக் கூட்டுத்தாபனத்தின் யூரியா உற்பத்தி ஆலைத் திட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்களைத் தங்க வைப்பதற்காக கம்பஹா மாவட்டம், பியகம தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 20 ஏக்கர் தென்னந்தோட்டத்தில் படலந்த வீட்டுத் திட்டம் நிறுவப்பட்டது. கிரிபத்கொட - பியகம பிரதான வீதிகளின் சந்திப்பிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைக்கப்பட்ட இந்த படலந்த வீட்டுத்திட்டத்தினுள், 64 வீட்டு அலகுகள், ஓர் அலுவலக வளாகம், ஒரு களியாட்ட விடுதி மற்றும் ஒரு நீச்சல் குளம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டன. யூரியா உற்பத்தி ஆலைத் திட்டம் நிறைவடைந்தபின் படலந்த குடியிருப்பு வளாகம் அப்படியே கைவிடப்பட்டிருந்தது. பின்னர் ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அந்தக் குடியிருப்புத் தொகுதியைத் தனது “தேவைகளுக்காகப்” பயன்படுத்திக்கொண்டார். 1988/1989 காலப்பகுதியிலேயே இந்தக் கட்டடத்தொகுதி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியதாகச் சொல்லப்படுகின்றது.
படலந்தவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள் யார்?
1987ஆம் ஆண்டு தொடக்கம் 1989ஆம் ஆண்டு வரையில் தெற்கில் ரோகண விஜேவீர தலைமையில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி ஏற்பட்டது. இடதுசாரிய சிந்தனையுடைய சிங்கள இளைஞர்கள் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றிருந்த சிங்கள அரசை எதிர்த்து ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த காலப்பகுதியிலேயே படலந்த குடியிருப்பு வளாகம் சித்திரவதை மற்றும் தடுப்பு மையமாக மாற்றப்பட்டது. பரந்த அளவிலும் நன்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளும் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட இடமாக இருந்த படலந்த குடியிருப்பு வளாகம் ஜே.வி.பி. உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்தது. இங்கு செய்யப்பட்ட அட்டூழியங்களில் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் ஆகியவை அடங்கும். இங்கு மட்டும் 5000 தொடக்கம் 10,000 வரையிலான ஜே.வி.பி.யினர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. இதில் கிட்டத்தட்ட 690 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவையனைத்தும் அக்காலப்பகுதியில் அந்தப் பகுதிக்கு பொறுப்பு வகித்த ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின்பேரில் இடம்பெற்றதாக சொல்லப்படுகின்றது. ரணிலின் உத்தரவை ஏற்று பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் உள்ளிட்ட பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் இந்தச் சித்திரவதைகளைப் புரிந்துள்ளனர்.
படலந்தவின் நடந்ததென்ன?
படலந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற பொலிஸ், இராணுவ அதிகாரிகள் சிலர் தற்போது சாட்சியமளிக்க முன்வந்திருக்கிறார்கள். அதேபோல படலந்த தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் சிலர் சாட்சியமளித்துள்ளனர். இந்தச் சாட்சியங்கள் படலந்த விடயத்தில் ஏதோ ஒரு அடிப்படையில் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியிருந்த படலந்த சித்திரவதைக் கூடத்தின் ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட கருணாரத்ன என்பவர் , அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்திருக்கிறார். “..படலந்தவிற்கு ஒருவரை கொண்டுவந்தால் முதலில் அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவார்கள். அதன்பிறகு அவர்களின் இரு காதுகளிற்கு பெரிய இரும்பு ஆணி அடிக்கப்படும். கண்களிற்கு தையல் ஊசியால் குத்துவார்கள். கண்ணாடித் துண்டுகளை சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிடாவிட்டால் பலமாக அடித்து சாப்பிட வைப்பார்கள். சாப்பிடும் போதே அந்த கண்ணாடி துண்டுகள் உடல் பாகங்களை கிழித்துக் கொண்டு கீழே செல்லும். சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பியினால் அவர்களின் முதுகில் சூடு வைப்பார்கள். இவற்றைச் செய்யும்போதே அந்த மனிதரின் அரைவாசி உயிர் போய்விடும். பின்னர் கீழே இறக்கி பொலித்தீன் உறைகளில் போடுவார்கள். அதற்குப் பிறகு விசாலமாக வெட்டப்பட்டுள்ள குழிகளில் அவர்களை இட்டு, அவர்களுக்கு மேல் ரயர்களைப்போட்டு எரியூட்டுவார்கள். படலந்தவின் கொல்லப்படும் நபர்களை எரிக்க இடம் போதாவிடின், மட்டக்குளியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று, அங்கே ரொட்டி போடும் தட்டு போல் ஒரு பெரிய தட்டு இருந்தது. அதில் போட்டு எரிப்பார்கள்.
இவையெல்லாம் எப்படி வெளிவந்தன?
1995ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க வெற்றிபெற்றார். அந்நேரத்தில் பரப்புரை மேடைகளில் சந்திரிகா அம்மையார் தெற்கிற்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, ஜே.வி.பி.யினர் மீது கடந்த கால அரசு கட்டவிழ்த்த வன்முறைகளுக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்பது. இதனால் அப்போது அரசியல் கட்சியாகப் பரிணமித்திருந்த ஜே.வி.பி .சந்திரிகாவுக்குத் தனது ஆதரவினை வழங்கியிருந்தது. சந்திரிகா அம்மையார் வெற்றிபெற்றதும், மேம்போக்காக சில குற்றச்செயல்களை விசாரிக்கத் தொடங்கினார். ஆனாலும் தெற்கில் அந்நேரம் பிரபலமாக இயங்கிய “ராவய” பத்திரிகை குழாமினர் இதனை விடவில்லை. படலந்த விடயத்தில் விடாப்பிடியாக இருந்தனர். யாரும் உள்நுழைய முடியாமல் தடைசெய்யப்பட்டிருந்த பகுதியாக இருந்த படலந்தவிற்கு, ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் எனத் தெரிவித்து, உள்ளே நுழைந்து ஆதாரங்களைத் திரட்டினர். அதனை ஊடகங்களில் வெளிப்படுத்தினர். எனவே சந்திரிகா அம்மையார் தவிர்க்கமுடியாதபடி, படலந்த விடயத்தில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தார். அந்த ஆணைக்குழு சில காலம் தொழிற்பட்டதோடு, ஆதாரங்களையும் திரட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையானது, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுமில்லை. விவாதிக்கப்படவுமில்லை. நீதிமன்ற நடவடிக்கைக்குட்படவுமில்லை. இதுவரைகாலமும் வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்தது. அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த அறிக்கையை மீளக்கிளறச் செய்துள்ளது. பேசுபொருளாக்கியிருக்கிறது. ரணில் மீதான மொத்த அடையாளங்களையும் கிழித்தெறிந்துள்ளது.