ஜெ.வேந்தன்
"அப்போதெல்லாம் யுத்தம் நடந்தாலும் உயிர்ப்பயம் மட்டும் தான் இருந்தது. ஆனால் மூன்று நேரமும் சாப்பிடவும் பிரச்சினைகள் இல்லாமல் நிம்மதியாகவும் இருந்தம். ஆனால் இப்ப ஒரு நேரம் வயிராற சாப்பிடுறதுக்கே யோசிக்க வேண்டி இருக்கு" என்கிறார் கிளிநொச்சியில் வசிக்கும் பெண் தலைமைக் குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சுளவதனி.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த மக்களும் பெண்தலைமைக் குடும்பங்களும் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் எண்ணற்றவை. மஞ்சுளவதனி போன்றோரின் குடும்பங்கள் வடக்கில் எண்ணற்றவை உள்ள போதும் அவர்களின் பிரச்சினைகளும் தீர்வில்லாமலேயே தொடர்கின்றன.
கணவனை யுத்தத்தில் இழந்தபோதும் தனது மூன்று பெண் பிள்ளைகளினதும் எதிர்காலம் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பொருளாதர சுமைகளைப் பொருட்படுத்தாது கூலி வேலை செய்து தனது குடும்பத்தை நடத்திச் செல்கின்றார் மஞ்சுளவதனி.
" சம்பளம் 1500 ரூபாவும் சில இடங்களில 2000 ரூபாவும் தான் தருகினம். இதைக்கொண்டு தான் எல்லாத்தையும் பார்க்கோணும் எண்டால் எப்பிடி முடியும்? " நிரந்தரமற்ற வேலையும் குறைந்த ஊதியத்தையும் கொண்டு நான்கு பெண்கள் ஒரு குடும்பத்தில் வாழ்வதென்பது தற்போதைய பொருளாதார சூழலில் மிகவும் இக்கட்டான நிலையாகவே உள்ளது.
“ சொந்தமாகத் தொழில் ஒண்ட செய்ய லோன் எடுக்கலாம் எண்டா அதுக்கு இரண்டு அரச உத்தியோகத்தர் கையெழுத்து வைக்கோனும் எண்டினம். எங்கள நம்பி யார் கையெழுத்து வைப்பினம்.?" என்கிறார், கணவன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த வவுனியாவில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாய் நந்தகுமாரி .
கணவன் காணாமல் ஆக்கப்பட்ட வேதனைகளோடும் பொருளாதார சுமையோடும் குடும்பத்தை எப்படி கொண்டு செல்வது என்று சிந்திக்க முன்னரே காலம் ஓடிவிடுகின்றது.
“ எங்கள நம்பி தொழில் செய்ய கடன் தாறதுக்கு யாரும் முன் வாறதில்ல. அதால எங்களுக்கும் வேற வழி இல்லாம தான் மைக்கிறோ பினான்சில கடன் வாங்கிறம். வட்டி வீதம் கூடவாகத் தான் இருக்கு. ஆனால் எங்கட தேவைய முடிக்க வேற வழி இல்லையே. நான் வேலைக்கு போறதில்ல. கணவர் தான் கிடைக்கிற எந்த வேலைக்கும் போய் உழைக்கிறார். அதவைச்சு இப்பத்த விலை வாசிக்க என்னதான் செய்ய ஏலும்? சாப்பாட்டு சாமான் வாங்கவே காணாது. 1000 ரூபா கொண்டு போனால் ஒரு சொப்பின்ல கூட சாமான் வாங்கேலே. அதால கடனும் வாங்கிட்டம். இப்ப பொருளாதார நிலம படுமோசமாக இருக்கு. என்ன செய்றதெண்டு தெரியேல்ல” என்கிறார் கனகராயன் குளத்தை சேர்ந்த நிரோசனி என்ற குடும்ப தலைவி.
அத்துடன் இந்நிலையிலிருந்து மீள வெளிநாடு செல்ல எண்ணி முகவர் ஒருவரிடம் ஒரு தொகை பணத்தை தாம் வழங்கியபோதும் இறுதியில் அந்தப் பணமும் ஏமாற்றப்பட்டு, இப்போது அதிக கடனில் மூழ்கி உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார் .
வடக்கில் வாழும் மக்கள் தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காகப் படுகின்ற இடர்கள் அதிகரித்தவண்ணமே உள்ளன. எத்தகைய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டாலும் மக்கள் அடுத்த நாள் என்ன செய்ய போகின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்கும் நிலையிலேயே உள்ளனர்.
ஏ-9 சாலையில் பயணிக்கும் பேருந்துகளில் ஏறி பயணிகள் மத்தியில் சிற்றுண்டிகளை விற்பனைசெய்யும், கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி க. ராமன் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,“முதலெல்லாம் ஒரு பஸ்ல ஏறினால் குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது கிடைக்கும். சனம் கச்சான், மிக்சர், தண்ணீர் போத்தல் என்று எதையாவது வாங்கும். இப்ப என்னதான் கூட்ட நெரிசலோட பஸ் வந்தாலும், ஏறி இறங்கிறதுதான் மிச்சம். ஒரு நூறு ரூபாய்க்குக்கூட சனம் எதுவும் வாங்கிறதில்லை. சனத்திட்ட காசில்லை. நானும் இந்தத் தொழில விட்டுப்போட்டு பிச்சையெடுக்கப் போகப்போறன்” என்றார்.
அவரின் இந்தச் சிறு வசனத்தில், மக்களின் நாளாந்த பொருளாதார நிலை எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது. திருமதி ராமன் போன்ற சிறுவியாபாரிகள் இந்தப் பொருளாதாரப் பேரிடரினால் தம் தொழிலையே இழக்கும் நிலைக்குள்ளாகிவிட்டனர் என்பதையும் அறியமுடிகின்றது.
இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் பொருளாதார ரீதியில் ஓரளவுக்கு முன்னேறியிருக்கும் யாழ்ப்பாணத்திலும், வறுமைப்பட்ட மக்கள் மேலும் வறுமைக்குள்ளேயே தள்ளப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.பண்ணைக் கடற்கரையில் கச்சான்கடை நடத்திவரும், ஆரியமலர், “எனக்கு மாற்று உடுப்புக்கூட இல்ல. யாராவது வீட்டில் கழிச்சுவிட்ட உடுப்புகள் இருந்தால் கொண்டு வந்து தாங்கோ. பேரன் பள்ளிக்கூட காற்சட்டை தைக்க காசில்லாததால் படிப்பையே விட்டிட்டான். வீட்டிலும் அவ்வளவு கஸ்ரம். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடுதான். நான் என்ர உயிர் இருக்கும் வரைக்கும் உழைச்சு சாப்பிட வேணும் என்றதுக்காகத்தான் இந்த கடைய நடத்திக்கொண்டிருக்கிறன். இப்பவெல்லாம் இதில எந்த வருமானமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் உள்ள இளைஞர்களின் நிலை பற்றி ஆராய்ந்தபோது, அவர்களின்நிலைகளில் சில மாறுபாடுகள் காணப்படுகின்றதை அவதானிக்க முடிந்தது. பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். எந்த நாடென்றாலும் பரவாயில்லை, இங்கு இனி வாழ முடியாது. எங்களது எதிர்காலம் கேள்விக்குறயாகவிடும் என்ற பயம் இளையோர் மத்தில் வேரூன்றத்தொடங்கியுள்ளது.
" கோடிக்கணக்கில காசு குடுத்து விசா எடுத்து வெளிய போறதுக்கு எனக்கு வசதியில்ல. அதால வேற வழியால போகத்தான் இப்ப நான் இருக்கிறன்" என்கிறார் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஜெகன். “இளமை காலத்தை யுத்தத்தில தொலைச்சிட்டம். இப்ப மிஞ்சின காலத்தையும் இப்பிடி பசி பட்டினியோட நிம்மதி இல்லாம வாழ ஏலாது . எங்கட பிள்ளையளுக்காவது நல்ல எதிர்காலத்த குடுக்கோனும் எண்டதுக்காகத்தான் இந்த நாட்ட விட்டு எப்பிடியாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு போயிடோணும் எண்டு இருக்கிறம்.
மனதில், ஒவ்வொரு நாளும் என்ன செய்யப்போறம் எண்டது மட்டும் தான் யோசிக்க வேண்டியிருக்கு. இப்பிடி இஞ்ச உள்ள அரசியல் பொருளாதார பிரச்சினைகளாலதான் என்னை மாதிரி இளம் பெடியள் எல்லாம் சட்ட விரோதமா எண்டாலும், எஜென்சிய பிடிச்சு எங்கயாவது ஒரு நாட்டுக்கு போயிடோனும் எண்டு போறாங்கள். வேற வழியும் இல்ல தானே. வருமானம் காணாது. சட்ட ரீதியா போக வசதியும் இல்ல. காலமும் இல்ல. அதனால தான் உயிர் போனாலும் பரவாயில்ல எண்டு பணயம் வைச்சு போறம். எங்களுக்கும் இந்த நாட்டில குடும்பத்தோட சொந்தங்களோட வாழ ஆசை தான். ஆனாலும் என்ன செய்ய முடியும்? இந்த பொருளாதாரப் பிரச்சினையால வேற வழி இல்லையே. எல்லாம் ஒரு நாள் மாறும். மாறோணும் எண்டது தான் எங்கட ஆசை. ஆனால் இதெல்லாம் கனவா தான் போகும்”. இவ்வாறு வடக்கில் உள்ள இளைஞர்களும் பெண்களும் நாட்டில் உள்ள பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்டு, விரக்தியுடன் வாழும் நிலையிலேயே உள்ளனர்.
எப்பொழுதும் சமூகத்தில் வசதியாகவோ உயர் மட்டத்திலோ இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியாது. ஆனால் நடுத்தர மற்றும் அடிநிலை மக்களின் நிலையில் இருந்து வாழும்போது இந்த நிலை மிக மோசமானதாகவே இருக்கும் என்பதுடன் பாதிப்பு என்பது எப்பொழுதும் அடிநிலை மக்களையே சாருகின்றது.
அத்துடன் அரசியல் பொருளாதார பாதிப்புக்களால் சிறுபான்மை சமூகங்களிடையே புதிதாக அதிகரித்த ஒரு விடயமாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. சாதாரணமாக பாடசாலை மாணவர்கள் முதல் இளைஞர் யுவதிகள் வரை அனைவருக்கும் கிடைக்குமளவுக்கு மலிந்திருக்கின்றது என்றால் சிறுபான்மை சமூகங்களின் மீதான பொருளாதார சுரண்டல் எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.
" எப்பொழுது இந்த சமூகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகம் பரவத்தொடங்கியதோ அன்றே பொருளாதார சுமை பெண்களின் மேல் ஏற்றப்பட்டு, அது குடும்ப வன்முறைகளின் வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது” என சட்டத்தரணியும் சமூகச் செயற்பாட்டாளருமான திருமதி.
றணித்தா ஞானராஜா தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்போது, ”தற்போது குற்றங்களின் வகைகள் வித்தியாசமான காரணங்களுக்காக, வித்தியாசமான வகைகளில் இடம்பெற்றுள்ளதை அறிக்கையிடப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த குடுப்ப வன்முறைகளால் பிள்ளைகளும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றார்கள்.
தற்போது நீதிமன்றுக்கு வரும் விவாகரத்து வழக்குகளும் பராமரிப்பு வழக்குகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகளால் குடும்பங்களை நடத்தி செல்ல முடியாமல் குடும்பத்தில் முரண்பாடாகி விவாகரத்தில் வந்து நிற்கின்றது .
பராமரிப்பு வழக்குகளிலும் 60 - 70 % வீதமான வழக்குகள் பராமரிப்பு தொகைகள் செலுத்தப்படுவதில்லை. போதிய வருமானம் இன்மை, போதைப்பொருள் பாவனைகளால், துணையாளர் கோரும் தொகையை அவர்களால் செலுத்த முடியாதுள்ளது. இதேவேளை நுண்நிதி நிறுவனங்கள் மூலமும், சிறுபான்மை சமூகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டு சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இதற்கு காரணம் இது தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்மை. நுண்நிதி நிறுவனங்களும் அடிப்படை வசதிகள் அற்ற அல்லது பின்தங்கிய கிராம மக்களைத்தான் அதிகளவில் இலக்குவைக்கின்றனர். ஏனெனில் அவர்களைத்தான் இலகுவாக ஏமாற்றமுடியும். அவர்களைத்தான் இலகுவில் அச்சுறுத்த முடியும். கடனளிக்கும் பணத்தைப் பன்மடங்காக மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.”
“ஐம்பதாயிரம் கடன் வாங்கினால் நாற்பதாயிரம் கட்டி முடியும் வரை வரை ஒழுங்காக வந்து வாங்கி செல்வார்கள். பின்பு ஐந்து, ஆறு தவணைகள் வரமாட்டர்கள் . அதன் வட்டியை அதிகரிக்கச்செய்து, அதன்பின்னரே வந்து வாங்குவார்கள்” எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள் .இப்படி ஒரு தந்திரமாக தான் மக்களை ஏமாற்றி நுண்நிதி நிறுவனங்கள் பொருளாதாரச் சுரண்டல்களை செய்து கொண்டிருக்கின்றன. இதனை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். கடன் தேவை என்றால் சமுர்த்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கிகள் ஊடகப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வங்கிகளில் பாதுகாப்பும், வட்டி வீதமும் குறைவாகத் தான் உள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை நிதிநிறுவனங்களிலோ கடன் வழங்கும் ஏற்பாடுகளிலோ மாற்றம் கொண்டு வருவதற்கு அரசிற்கு வழி இல்லை. ஏனெனில் ஏற்கனவே உள்ள பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் சிக்கலிற்குள்ளேயே செல்ல வேண்டி வரும் என்பதால் அந்த விடயத்தில் அரசு அதிக அக்கறை செலுத்துவதில்லை.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் இந்நிலை மாறவேண்டும் என்றால் இன்னும் சில காலம் செல்லும். இதனை கட்டியெழுப்பிய பின்னர்தான், இலங்கை வாழ் மக்கள் சாதாரண நிலைக்கு வரமுடியும்.
சாதாரண நிலை என்பது எவ்வளவு காலத்திற்கு என்பதை ஒரு சட்டத்தரணியாக இருந்து என்னால் தெரிவிக்க முடியாது. ஆனால் பொது உரிமைகள் சார்ந்து செநற்படும் செயற்பாட்டாளர் என்ற என்ற அடிப்படையில் சொல்வதென்றால், அது இன்று நாளை முடியக்கூடிய விடயம் இல்லை. நாங்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாலும் சட்ட திட்டங்களை இறுக்கினாலும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பொருளாதார ரீதியல் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரு விடிவுக்கு வர ஒரு தசாப்தம் என்றாலும் எடுக்கும்” என தெரிவித்தார்.
அரசியல் ரீதியிலான மாற்றம் என்பது சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரை உருவ வேறுபாடு தானே தவிர இந்தச்சமூகங்களை பொறுத்தவரை அவர்களின் செநற்பாடுகள் ஒரே மாதிரிதான் இருக்கப்போகின்றன என்பதே கடந்த கால வரலாறு.
ஆனாலும் இதுவரை அரசியல் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்த இளைஞர் யுவதிகளும் சிறுபான்மை மக்களும் தற்போது தமக்கான விடிவு காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறிச்செல்கின்றமை எதிர்காலத்தில் இம் மக்கள் மத்தியில் ஒரு நிரந்தரமான விடியலை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.