அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனாவை தவிர்த்து, 75 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.
சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது. இதனால், சீனாவுக்கான வரியை, நேற்று முன்தினம் 104 சதவீதமாக உயர்த்தினார். சீனா விடாப்பிடியாக அமெரிக்காவுக்கான வரியை, 84 சதவீதமாக உயர்த்தியது.
இந்நிலையில், சீனாவை தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தள்ளது.
சீனா உலக சந்தைகளுக்கு காட்டிய மரியாதையின்மையின் காரணமாக, அந்நாட்டுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை, 125 சதவீதமாக உயர்த்தியுள்ளேன். இது உடனடியாக அமுலுக்கு வரும். மறுபுறம், 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி, பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன என அறிக்கையொன்றின் ஊடாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக எந்த விதத்திலும் பதிலடி கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் 10 சதவீதம் என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.