காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் திகதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 52 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா.சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.