காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,126 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 98,117 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 61 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 117 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று அறிவித்த நிலையிலேயே அங்கு உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள வீடு ஒன்றின் மீதும் மகாசி அகதி முகாமில் உள்ள பொதுமக்களின் குழு ஒன்றின் மீதும் நேற்றுக் காலை நடத்திய தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இதில் மகாசி அகதி முகாமில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள்காட்டில் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. மறுபுறம் டெயர் அல் பலாஹ்வில் இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்றிருந்த வீட்டின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்வதோடு அங்குள்ள ஜபலியாக அகதி முகாம் இஸ்ரேலியப் படையின் முற்றுகையில் இருந்து வருகிறது. இந்த முற்றுகை பல மாதங்கள் நீடிக்கக் கூடும் என்றும் வடக்கு காசாவில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்றும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜியோரா ஐலாண்டால் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு வடக்கு காசாவில் உள்ள 400,000 குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றி அந்தப் பகுதியை இராணுவ வலயமாக மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.