புலி முத்திரை: விளைவுகளை இன்றுவரை அனுபவிக்கிறோம்!

banner


  • நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்றாலும் எங்களுக்குள் யார் பெரியவர் சிறியவர் என்ற ஏற்றத்தாழ்வு காணப்படுவதே பல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வடக்கு,கிழக்கு மக்களின் பிரச்சினைக்காக உலக அரங்கில் குரல் கொடுத்த ஒரேயொரு மலையக அரசியல் தலைவர் எங்களது மறைந்த சந்திரசேகரன் அவர்கள்தான். அதற்காக எமது கட்சியின் மீது புலி முத்திரை குத்தப்பட்டு, அதன் விளைவுகளை இன்றுவரை சுமந்துகொண்டுதானிருக்கிறோம் - என்று மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான அருணாச்சலம் அரவிந்த குமார் கூறினார்.
    அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தபோது அவர் ''எதிரொலி''க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    'எதிரொலி'க்கு வழங்கிய அவரது முழுமையான நேர்காணல் வருமாறு -எதிரொலி: ஓட்டுமொத்த மலையக மக்களின் தற்போதைய நிலை பற்றி சொல்லுவீர்களா?


அரவிந்த குமார்: எங்களுக்கு 200 வருடகால வரலாறு உள்ளது. இலங்கையின் தோட்டத்தொழில்துறையை மேம்படுத்துவதற்
காக இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டவர்கள் நாங்கள். எமது மூதாதையார்களாலேயே இலங்கை செல்வம் கொளிக்கும் நாடாக மற்றப்பட்டது. இதனை யாராலும் மாறுக்க முடியாது.
ஆனால், இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள எமது மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்;துவதற்கான எந்த விதமான திட்டமும் எங்களிடம் இல்;லை என்றுதான் கூறவேண்டும். இவர்களின் இவ்வாறான நிலைக்கு ஆளுந்
தரப்பை மட்டும் குற்றஞ்சாட்டுவதில் எந்த பிரயோசனமும் கிடையாது. எமது மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகத்தான் நாடாளுமன்றம் - மாகாணசபை - பிரதேச சபைகளில் பிரதிநிதிகள் உள்ளனர். கடந்த காலங்களில் மக்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் சரியாக இயங்கியிருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கு விடை இல்லை. அவ்வாறானவர்கள் சரியாக இயங்காமையாலேயே இன்றும் மலையக மக்கள் பல்வேறு இன்னல்களையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்றனர்.

எதிரொலி: கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மலையகபெருந்தோட்டதொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது எந்த நடைமுறையில்?

அரவிந்தகுமார்: சிறந்த கேள்வியாக நான் இதனை பார்க்கிறேன். 1972 இல் காணி சீர்திருத்த சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டது. அச்சட்டத்திற்கு அமைய 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கம்பனிகளிடம் இருந்த அனைத்து தோட்டங்களும் தேசிய மயமாக்கப்பட்டது. அன்றிலிருந்து 1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிர்வாகங்களின் கீழ் தோட்டங்கள் நிர்வாகிக்கப்பட்டு வந்தன. தோட்டத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலளார்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டங்கள் அரசிடம் இருந்து தனியாருக்கு வழங்கப்பட்டது. அப்போது தொழிலாளர்
களுக்கு சம்பளம் வழங்கப்படுவதற்காகவே கூட்டு ஒப்பந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் தொழி
லாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய அதிகப்படியான தொழிலாளர்களைக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாடவும் தீர்மானமானது.
அதற்கமைய, ஆரம்பத்தில் என்னவோ கவர்ச்சிகரமான சம்பளத்தைக் கொடுத்த தோட்ட கம்பனிகள் காலம் செல்லச் செல்ல தொழிலாளர்களை பழிவாங்க ஆரம்பித்து இன்று நிச்சயமற்ற தன்மைக்கு கொண்டுவந்துவிட்டுள்ளன. எனவே, கூட்டு ஒப்பந்தத்தை மரண சாசனமாகவே நான் பார்கின்றேன்.

எதிரொலி: ஆனால், தமது கோரிக்கையான 1000 ரூபாவை மலையக தொழிற்சங்கங்கள் இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனரே. இதற்கு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக மக்கள் முன்னணியின் பதில் என்ன?

அரவிந்தகுமார்: கூட்டு ஒப்பந்தத்தில் மூன்று பிரதான அமைப்புக்கள் பங்குதாரர்களாக இருக்கின்றார்கள். இலங்கை தொழி
லாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், கூட்டு கமிட்டி ஆகியவை. 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்ட அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கவால் இதுகுறித்த பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் பங்குதாரர்களாக இருக்கமுடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, இலங்கைத் தொழிலளார் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவை மட்டுமே 60 ஆயிரத்துற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருந்தன. ஆகவே, அவர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டும் பங்குதாரர்களாக உள்வாங்கப்பட்டனர். அத்துடன் பல்வேறு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு கமிட்டியும் பங்குதாரராகியது. அப்போது எமது கட்சியின் தொழிற்சங்கமாக இருந்த மலையக தொழிலாளர் முன்னணியின் அப்போதைய தலைவரான அமரர் சந்திரசேகரன் இந்தக் கூட்டு கமிட்டியில் இணைய முற்பட்டார். ஆனால் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற காரணத்தை காட்டி அவர் புறமொதுக்கப்பட்டார். அந்தக் காரணம் இன்றுவரை தொடர்கிறது.

எதிரொலி: நீங்கள் உட்பட அமைச்சர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஸ்னண் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியால் தொழிலாளர்களுக்கு இந்த முறை 50 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் எனச் சொன்னீர்கள். ஆனால், காலம் கடந்தும் இதற்கு பதில் இல்லையே?

அரவிந்தகுமார்: தனியார் துறையினருக்கு அரசாங்கத்தால் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில்
இடமில்லை. தோட்;டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டால் அனைத்து தனியார் துறைக்கும் வழங்கவேண்டும். எனவே, இவ்வாறான சட்டச் சிக்கலில் இந்த 50 ரூபா கொடுப்பனவு சிக்கியுள்ளது.அதுவே, கடந்த ஏப்ரல் முதல் இன்று
வரை இதனை வழங்க முடியாமைக்கு காரணம். ஆனால், சட்டத்தைத் தாண்டி அரசால் தொழில்துறையை முன்னேற்றுவது என்ற ரீதியில் இந்த சம்பள உயர்வை வழங்க முடியும். எனினும் அரசால் அவ்வாறு பெறப்படும் நிதியை தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்குவதில் சிக்கல் நிலையுள்ளது என பெருந்தோட்ட கம்பனிகள் தெரிவிக்கின்றன.

எதிரொலி: சட்டசிக்கல், சட்டசிக்கல் என்கிறீர்கள். அப்படியானால் இதனை எவ்வாறுதான் கையாளப்போகிறீர்கள்..?

அரவிந்த குமார்: இல்லை. இதை நான் இடியப்பச்சிக்கலாகவே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எதிரொலி: அப்படியானால் தோட்டதொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வுதான் என்ன..?

அரவிந்த குமார்;: கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களான பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேசி தீர்வுகாணவேண்டும். அவர்கள் நேர்மையாகவும் மக்களை நேசிக்கும் தன்மையுடனும் பேசவேண்டும். நாங்கள் அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும்.

எதிரொலி: பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் தோட்டதொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்க ஆஸ்திரேலிய ஏசியன் வேக்கஸ் லிங்க் என்ற அமைப்பை அணுகினீர்களா?

அரவிந்தகுமார்: நாங்கள் இன்னும் அந்த இலக்கை நோக்கிப்போகவில்லை. இன்னும்கூட தோட்டத்தொழிலாளர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிடியிலிருந்து மீட்க முடியாதுள்ளது. அந்தப் பணியை நாம் செய்து கொண்டுவருகின்றோம். மலையக தொழிலாளர்களின் பிரச்சினை சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு நாட்டுக்கு நாடு இயங்கும் அமைப்புகளைவிட ஐ.எல்.ஓவில் முறையிடுவதே நன்மை பயக்கும். அதற்கமைய நாம் ஐ.எல்.ஓவில் முறைப்பாடு செய்துள்ளோம். அவர்களும் தற்போது அதிக கரிசனை எடுத்துள்ளனர்.

எதிரொலி: மலையகத்திற்கும் வடக்கு - கிழக்கிற்கும் இடையில் ஒரு பிரிவினைவாதம் காணப்படுவதாக நீங்கள் உணர்கின்றீர்களா?

அரவிந்தகுமார்: இல்லை. முன்பு இருந்தது. ஆனால், தற்போது இல்லை. காரணம், பொதுப்பிரச்சினைகளின்போது நாம் ஒன்றாகவே நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல்கொடுத்து வருகின்றோம்.

எதிரொலி: மலையக மக்களின் சம்பளப்பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை, காணி விடுவிப்பு, இராணுவ முகாம்கள் அகற்றப்படாமை போன்ற இன்னோரன்ன விடயங்களில் ஏன் தமிழ் முற்போக்கு கூட்டணி வடக்கு - கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கொள்கையளவில் சேர்ந்து குரல் எழுப்பக்கூடாது? இப்போது பார்த்தீர்களானால், ஒரு முஸ்லிம் அமைச்சரை பதவி விலகக் கூறியதும் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகினர். ஏன் எமக்கிடையில் அந்த ஒற்றுமை இல்லை?

அரவிந்தகுமார்: மலையகத்திற்கும் வடக்கு - கிழக்கிற்கும் ஒரு உறவுப்பாலம் வேண்டும் என்ற ஆசையுடன் செயற்பட்டவர் அமரர் சந்திரசேகரன். அதுவே பல பிரச்சினைகளுக்கு அவர் முகம்கொடுக்க நேரிட்டமைக்கு காரணமாகவும் அமைந்தது. அவர் மாத்திரமே வடக்கு - கிழக்கு தமிழர்களுக்காக சர்வதேச அரங்கில் குரல்கொடுத்த ஒரேயொரு மலையக அரசியல் தலைவராவார். அண்மையில், தமிழ் தலைவர்கள் அனைவரையும் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். அதில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லை. எனவே, இங்கு பெரியவர் - சிறியவர் என்ற ஏற்றத்தாழ்வு பிரச்சினையுள்ளதாக நான் நினைக்கின்றேன். ஆகவே, அதுபோல் அல்லாது பொதுப்
பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும். ஏதோ ஒரு புள்ளியில் நாம் ஆரம்பிக்கவேண்டும். அதற்கான பிள்ளையார் சுழியை போட்டவர் மனோ கணேசன். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

முஸ்லிம் உறுப்பினர்களின் ஒற்றுமையை நாம் முன்னுதாரணமாகக்கொள்ளவேண்டும். அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும். ஆகவே, தமிழர்களின் ஒட்டுமொத்த பிரச்சினையை தீர்த்துவைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கும் வேட்பாளர் ஒருவரையே நாம் ஆதரிப்போம். பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்தரவாதத்தை வெறுமனே எழுத்தில் வழங்கினால் போதாது. மாறாக, மேடையில் அறிவிக்கவேண்டும்.

எதிரொலி: தற்போதைய ஜனாதிபதியும் தமிழர்களுக்கு தீர்வை தருவதாக மேடைகளில் கூறியே ஆட்சிக்கு வந்தார் ஆனால் ஆட்சி முடிவடையப்போகும் நிலையிலும் அந்த வாக்குறுதி புஸ்வாணமாhகியுள்ளதே?

அரவிந்தகுமார்: மலையகத்தில் பொருளாதாரப் பிரச்சினையும் வடக்கு - கிழக்கில் உரிமை சார்ந்த பிரச்சினையும் உள்ளது என்பதை விளங்கிக்கொள்வது முக்கியமானது. மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நிலைமை இதனைவிட மோசமடைந்திருக்கும்.இப்போது, காணிகள் விடுவிப்பில் முழுமையாக திருப்தியடையாவிடினும் ஓரளவு
திருப்தியடையமுடியும். இராணுவ முகாம்கள் ஓரளவு அகற்றப்பட்டுள்ளன. மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் இராணுவஆதிக்கமே மேலோங்கியிருந்திருக்கும்.

எதிரொலி: ஆக, நீங்கள் கோட்டபாயவை ஆதரிக்கப்போவதில்லை...?

அரவிந்தகுமார்: கோட்டபாயவை ஆதரிக்ககூடிய களத்தை அவர் இதுவரை ஏற்
படுத்தவில்லை. பெரும்பான்மை சமூகத்தை பொறுத்தமட்டில் அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஆதரவு சஜித்பிரேமதாசவிற்கே உள்ளது.

எதிரொலி: ஐக்கிய தேசியக்கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைக்கு என்ன காரணம்?

அரவிந்தகுமார்: அதற்கான உறுதியான காரணத்தை என்னால் கூறமுடியாவிட்டாலும் தற்போது கட்சியின் தலைவராக உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முறுகல்நிலை உள்ளது என்பது வெளிப்படை. பதவிஆசையே இதற்கான காரணமாகக்கூட இருக்கலாம்.

எதிரொலி: ஒருமாற்று தெரிவாக ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஏன் ஆதரவளிக்ககூடாது?

அரவிந்தகுமார்: இலங்கையில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்று மாத்திரமே ஆட்சியமைக்கபோகின்றது. எனவே, ஜே.வி.பிக்கு வாய்புகள் நிச்சயம் கிடைக்காது. அந்தக்கட்சியின் வாக்குபலம் வெறும் 5 இலட்சம் மாத்திரமே. எனவே, அவர்களை ஆதரிப்பதில் அர்த்தம் இல்லை.
இரு பிரதான கட்சிகளும் எம்மைக்கட்டுப்படுத்தி ஆதரவை கேட்கமுடியாது. எங்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு எவர் செவி சாய்கின்றாரோ அவருக்கே நாம் ஆதரவளிப்போம். எது எப்படியோ, இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக தெளிவாகக் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவை அறிவிப்போம்.

எதிரொலி: தமிழ் முற்போக்கு கூட்டணியை பதிவு செய்வதற்கு உத்தேசம் உண்டா?

அரவிந்தகுமார்: ஆம், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு சமர்ப்பித்துள்ளோம். எமது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமபலம் பொருந்தியவைகள். அதனால், எமக்குள் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. கூட்டமைப்பை ஏன் இதுவரை பதிவுசெய்யவில்லை என எனக்குத்தெரியாது.

எதிரொலி: இலங்கையில் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது. இந்தநிலையில், புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நீங்கள் வழங்கும் செய்தி என்ன?

அரவிந்தகுமார்: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால், அதை நீக்குவது அவ்வளவு சுலபமானதல்ல என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். எமது சட்டம் கடுமையாக இருந்ததால்தான், அண்மையில், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சதிப்புரட்சியைத் தடுக்கமுடிந்தது. இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் அமுலில் இருந்தாலும் அது புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தடையாக அமையாது.

எதிரொலி: பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில்தான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. எனவே, தமிழர்களுக்கு எதிராக மாத்திரமா அது பயன்படுத்தப்படுகின்றது?

அரவிந்தகுமார்: சட்டங்கள் கடுமையாக இருந்தபோதிலும் குண்டுத்தாக்குதலை தடுக்கமுடியாமல் போனதை ஏற்றுக்கொள்கின்றேன். எமது புலனாய்வுதுறையின் இயலாமையின் காரணமாகவேஅந்தத்தாக்குதலை தடுக்கமுடியாமல்போனது. ஆனால், தமிழர்களுக்கு எதிராக மாத்திரம் பயங்கரவாதத் தடைசட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பயங்கரவாதியாக பார்க்கமுடியாது.

எதிரொலி: ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமிழர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி?

அரவிந்தகுமார்: இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் இங்கு பலர் இருக்கின்றனர். ஆனால் பல தசப்பங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் அவர்களுக்கு தாய் நாட்டின் மீது இன்னமும் பற்று இருக்கின்றது. ஆனால் தற்போதைய தலைமுறையினருக்கு அவ்வாறான பற்று குறைவடைந்து செல்கின்றது. இது இப்படியே சென்றால், அவர்கள் எமது மண்ணை மறந்துவிடுவார்கள். தாய் மண்ணின் மீதான பற்றுதலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவேண்டும். தொடர்புகள் பலப்படுத்தப்படவேண்டும். தோட்டத்தொழிலாளர்களுக்காகவும் ஏனைய வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்காகவும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து பரந்தளவில் குரல் எழுப்பவேண்டும்.
நன்றி.