- ஐங்கரன் விக்கினேஸ்வரா-
இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்குப் பகுதி எப்போதும் போல கொந்தளிப்பாகவே உள்ளது. பலரும் நினைப்பது போல இரு நாடுகளும் வரலாற்று எதிரிகள் அல்ல. பல காலம் நட்புடனும் இருந்த நாடுகளே.
மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரும் மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் இராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வியும் எழுகிறது.
இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரபூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி இராணுவ வலிமை மதிப்பிடப்படுகிறது.
அன்று நண்பன் இன்று பகைவன்:
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல், போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது என்றாலும், இந்த இரண்டு நாடுகளும் நிரந்தர எதிரிகளாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், பொது எதிரிக்காக இருவரும் கைகோர்த்த பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. 1960களில், இஸ்ரேலும், ஈரானும் ஈராக்கிற்கு எதிராக இணைந்து செயல்பட்டன.
விரோதப் போக்கு கொண்ட அரபு ஆட்சிகளுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில், ஈரான் அதன் கடைசி மன்னரான ஷா என அழைக்கப்படும் முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சியில் இருந்தது. ஈராக் பொது எதிரியாகக் கொண்டு, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மற்றும் ஈரானின் உளவு அமைப்பான சாவக் ஆகியவை மத்திய ஈராக்கிய ஆட்சிக்கு எதிராக குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பதில் முக்கியமான பங்காற்றின.
மேலும், இஸ்ரேல், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு உளவுக் கூட்டணியையும் உருவாக்கின. ஷாவின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை இந்த உறவு அழுத்தமாக நீடித்தது.
இஸ்ரேல் -ஈரான் ஓர் ஒப்பீடு:
ஈரான் இஸ்ரேலை விடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒன்பது கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையான ஒரு கோடியைவிட பல மடங்கு அதிகமாகும்.
கடந்த 2023 ஆண்டில் ஈரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டொலராக இருந்தது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டொலராக இருந்தது.இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஈரானைவிட இரட்டிப்பாகும்.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி இஸ்ரேல் – ஈரான் இராணுவ பலம் ஒப்பீடுகளின்படி ஈரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. ஈரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1 லட்சம் வீரர்களே உள்ளனர்.அத்துடன் இஸ்ரேலிடம் 3,501 டாங்கிகள், 64 கடற்படைப் போர்க் கப்பல்கள், 3,106 ஏவுகணைகள், 460 போர் விமானங்கள்- ஹெலிகொப்டர்கள் ,ன் 48 நில வான் ஏவுகணைகள் என்பன உள்ளன,
ஆயினும் 1[S1] ,613 டாங்கிகள், 261 கடற்படைப்போர்க் கப்பல்கள், 1,491 ஏவுகணைகளை மட்டுமே ஈரான் கொண்டுள்ளது. அத்துடன் ஈரான் 336 போர் விமானங்கள்-ஹெலிகொப்டர்களையும், 279 நில வான் ஏவுகணைகளையும் வைத்துள்ளது.
அணு ஆயுத பலம்:
இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாக ஒருபோதும் கூறுவதில்லை.ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுத்தே வருகின்றது.
அமெரிக்காவின் நிலைப்பாடு :
எப்போதும் இஸ்ரேல் சார்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒருபோதும் மாறுவதில்லை.
ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு அறிக்கை வெளியிட்ட இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்களையும், வெளிநாட்டவரையும் கொன்று குவித்ததற்கு காரணமானவரை கொன்று கணக்கை தீர்த்து விட்டோம் என்றார். இதற்கு அமெரிக்காவும் வக்காலத்து வாங்கியது.
லெபனானில் 1983இல் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் வெடிகுண்டுத் தாக்குதலில் 63 பொதுமக்கள், அமெரிக்கக் கடற்படையினர் 241 பேர், பிரெஞ்சுப் படையினர் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் ஈரானை எதிர்க்க, இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க உறுதியாக வழங்கிவருகிறது.
லெபனானில் ஷியா, சுனி முஸ்லிம் வேறுபாடு:
லெபனான் பொதுவாக ஷியா முஸ்லிம் நாடாக அறியப்பட்டாலும், அங்கு ஷியா, சுனி முஸ்லிம்கள் ஏறக்குறைய சம அளவில்தான் உள்ளனர்.அதிகாரபூர்வ கணக்கெடுப்பு அங்கு நடைபெறாவிட்டாலும், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி சுனி முஸ்லிம்கள் 31.2 சதவீதம், ஷியா முஸ்லிம்கள் 32 சதவீதம் உள்ளனர் என தெரிய வருகிறது.
இது தவிர கிறிஸ்தவர்கள் 32.4 சதவீதம் உள்ளனர். இந்துக்கள், பௌத்தர்கள், யூதர்கள், சிறுபான்மையினராவர்.
சுனி, ஷியா முஸ்லிம் நாடுகளின் நிலைப்பாடு:
நஸ்ரல்லா கொலையான பிறகு, சுனி முஸ்லிம்கள் தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகள் அமைதி காத்தன. இஸ்ரேலுடனான உறவை சீர்படுத்துவதா அல்லது ஹிஸ்புல்லாவை ஆதரிக்கும் ஈரானை எதிர்ப்பதா என்ற குழப்பம்தான் இதற்கு காரணம்.
ஹிஸ்புல்லாவை 32 ஆண்டாக வழி நடத்திய நஸ்ரல்லாவின் எதிரி நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் பல இருந்தன. இதனால்தான் மேற்கத்திய நாடுகள், வளைகுடா அரபு நாடுகள், அரபு லீக் ஆகியவை ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பு என அறிவித்திருந்தன.
சுனி முஸ்லிம் நாடான சவுதி அரேபியா, லெபனானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தாலும், நஸ்ரல்லா பற்றி எதுவுமே கூறவில்லை. இதேபோல்தான் சுனி முஸ்லிம் நாடுகளான கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளும் நஸ்ரல்லா கொலையுண்டமை குறித்து எதுவும் கூறவில்லை. ஏன் சில இடங்களில் நஸ்ரல்லா கொல்லப்பட்டமையைக் கொண்டாடியதாகவும் அறியப்படுகிறது.
2011ஆம் ஆண்டில் ஷியா முஸ்லிம் இயக்கத்தை பஹ்ரைன் ஒடுக்கியது. இதற்கு காரணம், பஹ்ரைன் ஷியா முஸ்லிம் நாடாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் சுனி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான். ஆனால், சிரியாவில் மக்கள் சுனி முஸ்லிம்களாகவும், ஆட்சியாளர்கள் ஷியாக்களாகவும் உள்ளனர்.
லெபனானில் இஸ்ரேலியப் படையெடுப்பு:
1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 2006ல் நடந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாக்கள் எல்லை தாண்டி ஊடுருவி கொரில்லா தாக்குதலை நடத்தி 2 இஸ்ரேலிய வீரர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தனர்; மேலும் 3 வீரர்களைக் கொன்றனர். 34 நாள் போரில் 121 ஹிஸ்புல்லாக்கள் இறந்தனர்.
தரைப்படையெடுப்பில் பல சவால்கள் இருந்தாலும், இதனைக் போக்கும் வகையில் ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழிகள் அழிப்பு, நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கியமான தளபதிகள் கொலை, ஆயுக்த கிடங்குகள் அழிப்பு என அடுத்தடுத்த அதிரடித் தாக்குதல்களை நடத்திக்காட்டியுள்ளது இஸ்ரேல்.
முந்தைய படையெடுப்புகளில் நிகழ்ந்த கடும் அழிவின் பாடத்தில் இருந்து இந்த உத்திகளை இஸ்ரேல் தற்போது கையாள்வதாகக் கூறப்படுகிறது.