உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக போர் மூண்டது.
போர் விமானங்கள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் இடம் பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த இவ்விரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பான கூட்டறிக்கையில், தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் நத்தபோன் நக்ரபனிட்-டும், கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சகா டீ சாய்ஹா-வும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘இரு நாடுகளும் தற்போது நிறுத்தியுள்ள படைகளை எந்த அசைவுகளும் இன்றி பராமரிக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது. போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும். படைகளை வலுப்படுத்தும் எந்த ஒரு முயற்சியையும் யாரும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு முயல்வது, இயல்பு நிலைக்கான நீண்ட கால முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 20 நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.