இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான 34 வயது ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் மேயராக இன்று பதவியேற்றார்.
நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
புத்தாண்டு நாளான இன்று நியூயார்க் சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சப்வே ரெயில் நிலையத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்தப் பதவியேற்பு விழாவின் போது அவர் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருக்குர்ஆன் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"இது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" என்று பதவியேற்ற பிறகு மம்தானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மம்தானி நியூயார்க் மேயராகப் பணியாற்றுவார்.
தேர்தலின்போது டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் மக்களை மிரட்டி இருந்தார். ஆனால் டிரம்ப் உடைய மிரட்டலை புறக்கணித்து நியூ யார்க் மக்கள் மம்தானியை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர்.