வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷ்ய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது.
இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" அமெரிக்க தேசிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி வட அட்லாண்டிக் பகுதியில் வெனிசுலா தொடா்புடைய எண்ணெய்க் கப்பல் கைப்பற்றப்பட்டது.
அந்தக் கப்பல் வெனிசுலா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க தடைகளை மீறி எண்ணெய் கொண்டு செல்லும் ‘நிழல் கப்பல் குழு’வைச் சோ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட வெனிசுலா தொடா்பான இரண்டாவது எண்ணெய்க் கப்பல் இதுவாகும்.
இந்தக் கப்பலில் ரஷ்ய கொடி ஏற்றுவதற்கு முன்னா் பெல்லா-1 என்று அது அழைக்கப்பட்டது. பின்னா் ரஷியாவில் பதிவு செய்யப்பட்டு மரினேரா என்று பெயா் மாற்றப்பட்டது. கப்பல் ஊழியா்கள் ரஷியக் கொடியின் வண்ணத்தை கப்பலில் பூசியதாகத் தெரிகிறது.
அந்தக் கப்பல் வெனிசுலாவை நோக்கிச் சென்றாலும் அதில் சரக்கு ஏற்றப்படாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான தொடா்பு காரணமாக அந்தக் கப்பலுக்கு 2024 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, 3 முதல் 5 கோடி பேரல் உயா்தர எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா அனுப்பும் என்று டிரம்ப் அறிவித்தாா். இதற்கு வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் ஒப்புக்கொண்டாரா என்பது தெளிவாகவில்லை. இதற்கான சட்ட அடிப்படை என்ன என்பதும் தெரியவில்லை.
இருந்தாலும், இந்த அறிவிப்பைத் தொடா்ந்து சா்வதேச் சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது.