உலகெங்கும் ஊரடங்கும் கொரோனா பீதியும் அரசுகளை பீதியடையச்செய்து மக்களை வீடுகளில் முடக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றக்கும்பலொன்று கற்பனைக்கு எட்டமுடியாத குற்றச்செயலொன்றினை மேற்கொள்ள திட்டமிட்டமை அம்பலமாகியுள்ளது. அந்த திட்டமிட்ட குற்றச்செயல் தோல்வியில் முடிவடைந்ததால் அதன் பின்னணியிலிருந்தவர்கள் அனைவரும் சட்டத்துறையினரின் காலடியில் வந்து விழுந்திருக்கிறார்கள்.
இவர்களது நடமாட்டங்களை கடந்த இரண்டு வருடங்களாக அவதானித்துவந்த தாங்கள் கடைசியில் அமுக்கிவிட்டதாக ஆஸ்திரேலிய காவல்தரப்பினர் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்னமும் இதில் மறைந்திருக்கும் மேலதிக மர்மங்கள் துலங்குமா? விளங்குமா? என்று இனிவரும் கைதுகள் மேலும் உறுதிப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இரண்டு நாடுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தப்படுவதும் அப்படியான நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்படுவதும் சாதாரணமாக நாங்கள் கேள்விப்படுகின்ற சம்பவங்கள்தான். அநேகமாக, இந்தக்குற்றவாளிகள் விமான நிலையங்களில் கைது செய்யப்படுவார்கள். கப்பல்களில் போதைப்பொருள் கடத்த முயற்சி செய்தவர்கள், படகு மூலம் சிறு தீவுகளிலிருந்து போதைப்பொருட்களை உற்பத்திசெய்து நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எத்தனித்தவர்கள் என்று பல திடுக்கிடும் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் சட்டங்கள், அந்த சட்டங்களில் காணப்படும் ஓட்டைகள், காவல்துறையினர் இதில் காண்பிக்கும் மெத்தனங்கள், அதிகாரத்தரப்புக்களுக்கு இதன் பின்னணியிலுள்ள கைகள் என்பவையெல்லாம் போதைப்பொருள் கடத்தல் – பாவனை போன்ற பெரிய குற்றங்களில் செல்வாக்கு செலுத்துபவையாக காணப்படுவது வழக்கம்.
ஆனால், ஒரு நாட்டிலிருந்து தனி விமானமொன்றை இரகசியமாக ஓட்டிச்சென்று இன்னொரு நாட்டிலிருந்து ஐநூறு கிலோ போதைப்பொருளை ஏற்றிவருவதற்கு போடப்பட்ட திட்டம் பற்றி கேள்வியுற்றிருக்கிறீர்களா? அதாவது இரண்டு நாடுகளின் சட்டத்தின் மீதும் சறுக்கீஸ் விளையாடியபடி,ஐநூறு கிலோ போதைப்பொருளை இறக்குமதி செய்வதற்கு முயற்சித்த ஆஸ்திரேலிய குற்றக்கும்பல் ஒன்று இவ்வாறு அகப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்கிய இத்தாலியை பூர்வீகமாக கொண்ட கும்பலொன்றின் துணிகர போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு இதன் மூலம் பிடிபட்டிருப்பதாக ஆஸ்திரேலிய பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த கடத்தல் நாடகமும் சிக்கி சிதைந்து சின்னாபின்னமாகிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.
கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி காலை குவீன்ஸ்லாந்தின் ஒதுக்குப்புறமான பிரதேசமொன்றிலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று பாப்புவா நியு கினியாவுக்கு சென்று சேர்ந்திருக்கிறது. விமானக்கண்காணிப்புக்குள் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மூவாயிரம் அடிகளுக்கு கீழ் இந்த விமானம் மிக்கவனமாக ஓட்டிச்செல்லப்பட்டிருக்கிறது.
இந்த விமானத்தில் போதைப்பொருட்களை ஏற்றிவருவதற்கு ஏற்றவகையில் திறமான பெட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் பத்திரமாக பொருளை கொண்டுவருவதற்கான தயாரிப்புக்கள் முன்னமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பாப்புவா நியு கினியாவில் போயிறங்கிய இந்த விமானம் அங்கு சுமார் ஐநூறு கிலோ போதைப்பொருட்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு அன்று மாலையே ஆஸ்திரேலியாவுக்கு திரும்பத்திட்டமிட்டிருக்கிறது. விமானம் சட்ட விரோதமானது. ஓடிய பாதையும் சட்ட விரோதமானது. அதில் ஏற்றிய பொருளும் சட்டவிரோதமானது. இரு நாட்டு பாதுகாப்பு தரப்புக்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு உச்சத்திறமையோடும் துணிச்சலோடும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த கடத்தலில் கரணம் தப்பினால் மரணம்தான் என்பதால் –
போன விமானத்தில் அன்றைக்கு “பொருளுடன்” திரும்புவது திட்டமாக இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் திட்டமிட்ட இந்தக்கடத்தல் கும்பல், இந்த சிறிய ரக விமானம் எவ்வளவு எடையை தூக்கிக்கொண்டு பறக்கும் என்ற அடிப்படை விடயத்தில் கோட்டைவிட்டுவிட்டது என்கிறது பாப்புவா நியூ கினியா பொலீஸ். அது தமக்கு வாய்ப்பாகப்போய்விட்டது என்கிறது.
ஜூலை 26 ஆம் திகதி அங்கிருந்து கிளம்பிய விமானம், பறக்கத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏற்றிய போதைப்பொருளை தூக்கிக்கொண்டு ஓடமுடியாமல்,விழுந்துவிட்டது. அந்தப்பறப்பின்போது அதில் ஓட்டியோடு எத்தனைபேர் பயணம் செய்தார்கள் என்ற விவரம் தெரியாது. ஆனால், பாப்புவா நியூ கினியாவில் ஒதுக்குப்புறமான இடமொன்றிலிருந்து கிளம்பிய விமானம் காட்டுப்பகுதிக்குள் சென்று விழுந்திருக்கிறது.
திட்டம் சொதப்பிவிட்டதில் மனம்தளராத இந்தக்நடத்தல் கும்பல் விமானம் விழுந்த இடத்துக்கு சென்று அதிலிருந்த போதைப்பொருட்களை அகற்றிவிட்டது.
கடைசியில் விழுந்த விமானத்தை தேடிப்பிடித்து பாப்புவா கினியா பொலீஸார் சென்று பார்க்கும்போது அதில் போதைப்பொருள் கடத்தப்பட்டதற்கான சந்தேகங்கள் உருவாக்கியதே தவிர, அதற்குள் போதைப்பொருட்கள் எதையும் காணவில்லை.
இந்நிலையில், விமானம் விழுந்து மூன்று நாட்களின் பின்னர் பாப்புவா நியூ கினியாவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் சென்று குறிப்பிட்ட ஆஸ்திரேலிய விமானத்தின் ஓட்டி சரணடைந்துள்ளார். நடந்த கூத்துக்களை அனைத்தையும் சொல்லியிருக்கிறார். போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட அங்குள்ளவர்களது விவரங்களையும் தான் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி வந்த வழியையும் போட்ட திட்டங்களையும் சொன்னவுடன். தூதரகத்தினர் இதனை பாப்புவா நியூகினியா தரப்புடன் பேசியிருக்கிறார்கள்.
பாப்புவா நியூ கினியா ஜனாதிபதியே இந்த விடயத்தினை ஆஸ்திரேலிய காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவந்து, இரண்டு நாடுகளும் இணைந்து இந்த போதைப்பொருள் கும்பலை பிடிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதேவேளை, ஆஸ்திரேலிய பொலீஸார் இரண்டு வருடங்களாக மேற்கொண்டுவந்த விசாரணைகளின் அடிப்படையில் – இந்த விமானம் பாப்புவா நியூ கினியாவில் விழுந்த அதே நாளில் – விக்டோரியாவிலும் குவீன்ஸ்லாந்திலும் ஐந்து பேரை கைது செய்தார்கள்.
இவர்கள்தான், பாப்புவா நியூ கினியாவிலிருந்து வந்து இறங்கவிருந்த போதைப்பொருளை விக்டோரியா – சிட்னி – குவீன்ஸ்லாந்து பகுதிகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டவர்கள் என்று பொலீஸார் தெரிவிக்கிறார்கள். 31 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்ட இந்த ஐவரும் இத்தாலியை பூர்வீகமாகக்கொண்ட ஆஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல்கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர். வந்து இறங்கவிருந்த சுமார் எட்டு கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருளை ஆஸ்திரேலிய பயன்பாட்டாளர்களின் மத்தியில் விநியோகித்து சமூகத்தை சிதைப்பதற்கு திட்டம்போட்டவர்கள் இவர்கள் என்று பொலீஸ் விசாரணைக்குழுவினர் அக்குவேறு ஆணிவேறாக இவர்களின் திட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டு பொலீஸாரின் விசேட விசாரணையாளர்களினால் தற்போது விசாரிக்கப்படுகின்ற இவர்கள் ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டல், இவர்கள் அனைவருக்கும் ஆயட்கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த விமானத்தை ஓட்டிச்சென்றவர் பாப்புவா நீயூ கினியாவில் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர் என்று குடிவரவுச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்த இரண்டு நாடுகளுக்கும் தெரியாமல் ஐநூறு கிலோ போதைப்பொருளை சுமந்து ஓடுவதற்கு உதவியாக இருந்த பிரபலமான விமானத்தின் வரலாறு என்ன என்று விசாரணை செய்தபோது –
குறிப்பிட்ட விமானம் விக்டோரிய கம்பனியொன்றில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த விமானம் ஒருபோதும் தங்களது சேவையின் கீழ் பறப்பில் ஈடுபடவே இல்லை என்று அந்தக்கம்பனி அடித்துச்சொல்கிறது. இதுபோக, விமானத்தின் உரிமையாளர் விவரத்தை தேடிப்போனபோது, அது பாப்புவா நியூ கினியாவை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரது பெயரில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவர் தற்போது உயிரோடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட நபர், அந்நாட்டின் ஒரு கட்சித்தலைவராக இருந்தவர் என்றும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சரமாரியான கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் இந்த விமானத்தின் பின்னணியில் அவிழ்ந்த அடுத்த மர்மமாக தெரியவந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்குள் கடலால் அகதிகள் வருகிறார்கள், கை கழுவாதவர்களால் கொரோனா வருகிறது என்று எங்கு பார்த்தாலும் கண்களில் எண்ணையையும் கைகளில் சனட்டைஸரையும் உற்றி சகல பாதுகாப்பு தரப்பினரும் உஷாராக இருக்கும்வேளையில் –
இவர்கள் அனைவரையுமே அடிமுட்டாள்கள் என்று ஒதுக்கிவிட்டு ஒரு கும்பல் தனி விமானத்தில் போதைப்பொருளை இறக்குமதி செய்து இந்த நாட்டில் விநியோகம் செய்யுமளவுக்கு திட்டமிட்டிருக்கிறது என்றால், இந்த முரட்டுத்துணிச்சலுக்கு என்ன பெயர் வைப்பது?
நாங்கள் என்ன வைப்பது? அதுதான் பொலீஸாரே வைத்திருக்கிறார்கள் நாமம்!