- ஐங்கரன் விக்கினேஸ்வரா-
ஒருமாதகால தொழிட்கட்சி ஆட்சியின் பின்னர், கட்சிக்குச் சிக்கல் தரும் வகையில் இப்போது மிகப் பெரிய வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. இதைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது. பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி இயக்கங்கள் திட்டமிட்டு இந்த வன்முறைகளை நடத்துவதாக புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டித்துள்ளார்.
கடந்த மாதம் ஜூலை 29-ஆம் திகதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில் கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதன்பின் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறின. இதனால் பிரிட்டன் முழுக்க கலவரம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த ஜூலை மாதம் தான் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானார்.
இதற்கிடையே தொழிலாளர் கட்சிக்குச் சிக்கல் தரும் வகையில் இப்போது மிகப் பெரிய வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. அதைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது. கடந்த வாரம் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் நடன வகுப்பில் திடீர் தாக்குதல் நடந்தது. இதில் மூன்று சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரிட்டனில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதே இதுபோன்ற தாக்குதல்களுக்குக் காரணம் எனக் கூறி அங்கே பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
மூன்று சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த அந்த தாக்குதலில் கைதாகியுள்ள நபர் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர் என்றும் அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் தவறான தகவல் பரவியது. இதனால் குடியேற்றத்தை எதிர்க்கும் குழுக்கள் முஸ்லீம் எதிர்ப்பு குழுக்கள் திடீரென இந்த போராட்டங்களை ஆரம்பித்தன. அதுவே இப்போத வன்முறையாக மாறியுள்ளது.
அதேநேரம் இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் பிரிட்டனில் பிறந்தவர் தான் என்றும் போலீசார் விளக்கமளித்துள்ளனர். மேலும், கைதான நபரின் குடும்பம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதை ஏற்க மறுத்து அங்கே போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இங்கிலாந்தில் லிவர்பூல், பிரிஸ்டல், ஹல் மற்றும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் மற்றும் பிளாக்பூல் எனப் பல நகரங்களில் இந்த வன்முறை போராட்டங்கள் பரவியுள்ளன. இந்த விவகாரத்தில் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்துள்ளனர்.
மான்செஸ்டர் மற்றும் பெல்ஃபாஸ்டில் தாக்குதல்கள் நடந்த நிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. லிவர்பூலில் ஒரு நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த வன்முறையில் போலீசார் பலரும் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே தீவிர வலதுசாரி இயக்கங்கள் திட்டமிட்டு இந்த போராட்டங்களை நடத்துவதாக அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விமர்சித்துள்ளார்.
மேலும், சிறுமிகள் உயிரிழக்கக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியே இங்கிலாந்தை தீவிர வலதுசாரி வன்முறைக்கு திறந்துள்ளனர் என்ற குற்றஞ்சாட்டு தற்போது எழுந்துள்ளது. தீவிர வலதுசாரி வன்முறைக்கு காரணம் கன்சர்வேடிவ்கள் என இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முன்னாள் ஆலோசகர் டேம் சாரா கான், இவ்வாறு தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
முன்னைய கன்சர்வேடிவ் அரசாங்கம் கலாச்சார வெறுப்பு நிகழ்ச்சி நிரலுடன் தீயை மூட்டுவதன் மூலமும், நாட்டின் சில பகுதிகளில் வெடித்துள்ள தீவிர வலதுசாரி வன்முறைக்கு இங்கிலாந்தை பரந்த அளவில் திறந்து விட்டதாக, டோரி பிரதம மந்திரிகளின் தீவிரவாதம் குறித்த மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் வரை ரிஷி சுனக்கின் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மீள்தன்மைக்கான சுயாதீன ஆலோசகராக இருந்த டேம் சாரா கான், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் இருவரின் கீழும் தீவிரவாத எதிர்ப்பு ஆணையராக செயல்பட்டவர்.
தீவிர வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டுவதற்கு சட்டத்தில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பல அரச நிர்வாகங்களின் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலாச்சாரப் வெறுப்பகளை நடத்துவதன் மூலம் ஆதாயத்தைப் பெற முயன்றனர், என கான் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை தீவிர வலதுசாரி வன்முறைகளை கண்டனம் செய்தார், பல நாட்கள் வன்முறையான குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் ஹோட்டல் மீதான தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடைந்தன. குற்றவாளிகள் சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்வார்கள் என்று கூறினார்.
இந்த வார இறுதியில் நாங்கள் கண்ட தீவிர வலதுசாரி வன்முறையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என்று பிரதமர் ஸ்டார்மர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வன்முறையில் பங்கேற்றவர்கள் சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
அவர்களின் தோல் நிறம் அல்லது மத நம்பிக்கைகள் காரணமாக இந்த கோளாறு மக்களை குறிவைத்ததாக அவர் கூறினார். மேலும் இங்கிலாந்தின் தெருக்களில் ஒழுங்கீனத்தை சட்டப்பூர்வமாக்க எந்த வழியும் இல்லை என்றார்.
கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிராக தனது தொழிற்கட்சி ஒரு தீர்க்கமான தேர்தல் வெற்றியைப் பெற்ற பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமராக பதவியேற்றார் ஸ்டார்மர்.
பிரித்தானியைவைப் பொறுத்தவரைக் கடந்த 2011இல் கடைசியாக மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. அப்போது லண்டனில் கறுப்பினத்தவர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து பல ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிய போராட்டங்களை நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை வெடித்தன. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரிய வன்முறை வெடித்துள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.