பிரித்தானியா லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான (MP) உமா குமரன், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற கீழ்-செயலாளராகவும் , (Parliamentary Under-Secretary of State) உதவி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, ஜூலை 20, 2026 அன்று பிரதமர் அலுவலகம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
விரிவான அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைந்துள்ளது.
ஈஸ்ட் வில்லேஜ் உள்ளிட்ட ஸ்ட்ராட் போர்டு மற்றும் போ தொகுதியை ஜூலை 2024 முதல் உமா குமரன் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அவர் 11,634 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இவர் ஈழத் தமிழ் பின்புலம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பெற்றோர் 1980களின் தொடக்கத்தில் இலங்கையில் இடம்பெற்ற தமிழர் எதிர்ப்பு வன்முறைகளிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தவர்கள் என உமா குமாரன் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன்னை “the first British MP of Tamil heritage” என்றும், ஈழத்தமிழர் சமூகத்திற்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.