மேற்கு ஆஸ்திரேலியாவின் செனட்டர் பாத்திமா பேமன், ஆஸ்திரேலியாவின் குரல் கட்சியின் நிறுவுநர். வலுவான ,ஒருங்கிணைந்த ஆஸ்திரேலியாவுக்காக போராடிவருகிறார். பல்வேறு சமூகங்களின் குரல்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் அவரது கட்சி, நாடு முழுவதும் ஒற்றுமை, சமூக நீதி மற்றும் சமத்துவ வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முற்போக்கான கொள்கைச் சீர்திருத்தத்தை வலியுறுத்தும் அதே வேளையில் விளிம்புநிலை சமூகங்களின் தேவைகளுக்கும் இவரது கட்சி முன்னுரிமை அளிக்கிறது. எதிரொலி இதழுக்காக அவருடன் காணொளி வாயிலாக நிகழ்த்திய நேர்காணல் இது.
நேர்கண்டவர்: ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
எதிரொலி :- பல வேலைகளுக்கு நடுவில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு எதிரொலி வாசகர்கள் சார்பாக நன்றி.
செனட்டர் பாத்திமா பேமன் : - ஆமாம். கான்பராவிற்கு செல்வதற்கு முந்திய நாட்களில் ஓயாத வேலைகள் இருக்கும்.
எதிரொலி : - ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு உங்களைத் தூண்டியது மற்றும் உங்கள் இயக்கத்தின் நோக்கங்கள் எவைகள் என்பதையும் கூற முடியுமா ?
செனட்டர் பேமன் : - ’ஆஸ்திரேலியாவின் குரல் இயக்கம்’ என்பது அனைத்துத் தரப்பு ஆஸ்திரேலியர்களுடன் நான் தொடர்ந்து பல முறை நடத்திய உரையாடல்களுக்கு பிறகு உருவாக்கப்பட்டது.ஒவ்வொரு சமூகத்தினரும்’ எங்கள் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை’ என்று ஏங்குகின்றனர்.
இரண்டு பெரிய கட்சிகளினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும், இரண்டு பெரிய கட்சிகள் இடையேயான இரட்டையாட்சி முறை உடைக்கப்பட வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.
மக்கள் ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போது இரண்டு தீமைகளில் குறைவான தீமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக நாங்கள் இருப்போம் . ஆஸ்திரேலியாவின் குரல் இயக்கம் என்பது பல்வேறு சமூகங்களின் நம்பிக்கைகள் ,மதிப்புகள், கொள்கைகள், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கட்சியாக இருக்கும்.நாங்கள் தொழிலாளர் கட்சியை விட தைரியமாக இருக்கப் போகிறோம், ஆனால் பசுமைக் கட்சியை விட நாங்கள் மிகவும் நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு குரலாக இருப்போம். பசுமைக் கட்சி என்பது "எங்கள் வழி தனிவழி " என்பது எல்லோருக்கும் தெரியும் தானே .
எனவே ஆஸ்திரேலியாவின் குரல் இயங்கும் ஒரு நடுநிலை உள்ளது, மேலும் நாங்கள் உண்மையில் மக்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம். ஏனெனில் பெரிய கட்சிகளைப் போலல்லாமல், முறையான ஆய்வுகள் இல்லாமல், முறையான ஆலோசனைகள் இல்லாமல் காற்றில் இருந்து பொருட்களைப் பறிக்க நாங்கள் விரும்பவில்லை. பல மசோதாக்கள் அரசாங்கம் லிபரல் கட்சியுடன் மோசமான ஒப்பந்தங்களைச் செய்து, வாக்காளர்களை உண்மையில் மோசடி செய்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆஸ்திரேலியாவின் குரலுக்கு இதுவரை வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும், உறுப்பினர்களாக, தன்னார்வலர்களாக மாற விரும்பும் நபர்களிடமிருந்து பெருவாரியான ஆர்வத்தை காண முடிகிறது. மாற்றத்திற்கான வாய்ப்புகள் மிக நன்றாக இருக்கின்றன.
எதிரொலி : - ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தகத்தில் கோல்ஸ் மற்றும் வூல்வொர்த்ஸ் என்பன ஆதிக்கம் செலுத்துகின்றனவோ அதே போன்று அரசியலில் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது . எதிர்க்கட்சியில் யார் வந்தாலும் அவர்கள் போனமுறை எதிர்க்கட்சியில் யார் இருந்தார்களோ அவர்கள் பேசுவது போலவே இருக்கிறது . ஆளுங்கட்சியும் அவ்வாறே தான். அவர்களின் தொனி ஒன்றுதான், குரல் ஒன்றுதான். இங்கு எந்த மாற்றத்தையும் காண முடிவதில்லை. அந்த நிலை ஏன்?
செனட்டர் பேமன் : - பாரம்பரிய தொழிலாளர் கட்சி வாக்காளர்கள் தங்கள் கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருப்பதை காண முடிகிறது . தொழிலாளர் கட்சி வலது சாரியாக மாறிவருகிறது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் தாராளவாதிகள் மற்றும் பீட்டர் டட்டன் போன்றவர்களைப் போன்றே ,முடிவெடுக்கிறார்கள் உங்களுக்குத் தெரியும் தானே. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் கடலோரக் காவல் கொள்கைகள் ,நாடுகடந்த ஏதிலிகள் பாதுகாக்கும் இடங்களை மூடுதல் என்று எல்லா விடயங்களிலும், உண்மையான தொழிற்கட்சியின் முற்போக்கு மதிப்புகள் எங்கே இருக்கின்றன.
கோஃப் விட்லமில்( Gough Whitlam), பாப் ஹாக்கின்(Bob Hawke) நாட்களில், அவர்கள் உண்மையிலேயே தைரியமாக தாங்கள் நம்பும் கொள்கைகளுக்காக நேர்மையாக நின்றார்கள். இப்போது, அவர்கள் தங்களை லிபரல்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் முர்டாக் ஊடகங்களைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள். மேலும் கூட்டணி, தாராளவாதிகள் மற்றும் தேசியவாதிகள் கும்பல் தொழிலாளர் கட்சிக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வார்கள் என்று பயப்படுகிறார்கள் . ஆனால் அதுதான் அரசியல். நீங்கள் ஒரு படி கூட முன்னோக்கி எடுக்காமல் பயப்பட முடியாது. அதனால் நீங்கள் அங்கேயே தேங்கி நிற்கிறீர்கள். நீங்கள் முன்னேறவில்லை.
எதிரொலி : - உங்கள் கட்சியைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் போது பசுமைக் ( Greens ) கட்சியிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று கூறினீர்கள் . இனப்பிரதிநிதித்துவம் என்று வரும்போது, நீங்கள் எப்படி ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பல்வேறு இன சமூகங்கள் ஆஸ்திரேலிய அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட செய்ய முடியுமென்று நினைக்கிறீர்கள் ? அதற்கான வழிவகைகள் உங்கள் கட்சியின் கொள்கைகளில் இருக்கின்றனவா ?
செனட்டர் பேமன் : - ஒரு புலம்பெயர்ந்த பின்னணியில் இருந்து வந்தவள். என் அப்பா ஒரு அகதி. என் கதை எனக்கு மட்டும் தனித்துவமானது அல்ல.இதேபோன்ற கதையைப் பகிர்ந்து கொள்ளும் பலர் ஆஸ்திரேலியாவைச் சுற்றி உள்ளனர். உங்களுக்குத் தெரியும், பெற்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, படகில்ஏறி, ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள், அவர்கள் 24 மணி நேரமும் கடினமாக உழைத்து, தங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.
குழந்தைகள் வளர்ந்து வெற்றியடைகிறார்கள், அவர்கள் சமூகத்திற்கு கூடுமானவரை பங்களிக்கிறார்கள். எனவே, பன்முக கலாசார மற்றும் இனக் குழுக்களின் பிரதிநிதித்துவத்துடன், அவர்கள் என்னைப் பிரதிபலிப்பதாகவும் நான் உணர்கிறேன். அவர்கள் தங்கள் குழந்தைகளை என்னில் பார்க்கிறார்கள். நமது நவீன ஆஸ்திரேலியா, வளர்ச்சியடைந்த பன்முக கலாசாரம் மற்றும் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாசார நாடுகளில் ஒன்றாகும்.
இது விரைவில் அனைத்து சமூகங்களின் குரல்களையும் உயர்த்துவதற்கான வாய்ப்பைப் பெறும். ஆங்கிலோ சாக்சன்கள் இனங்கள் மட்டுமல்ல . எல்லா இனங்களும் பிரதிநிதித்துவம் பெறும் நாள் வரும். என்னைப் பொறுத்தவரை, புலம்பெயர்ந்தவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்துவது எப்படி என்பதை நான் உணர்ந்ததால், வேறு எந்தக் குழுவுக்கும் நான் அதைச் செய்ய மாட்டேன்.
ஒரு பன்முக கலாசார சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் உறுதியளிக்கும் போது, எல்லாத் தரப்பு மக்களும் வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு வழிகளில் தங்களை நடத்துவது, அவர்களின் கலாசார உடை, உணவு, புனிதமானவை என்பதை நாம் உணர வேண்டும். எல்லா கலாசார உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். உண்மையான பிரதிநிதித்துவம் என்று வரும்போது, அது எல்லாச் சமூகங்களில் இருந்து உண்மையாக வர வேண்டும். சமூகம் தான் முக்கியம் .
எதிரொலி : - இந்த இரண்டு கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக புலம்பெயர்ந்தோரை ஒரு அடையாளமாகப் ( வாக்கு வங்கி )பயன்படுத்தினர். இப்பொழுது உங்கள் கட்சி புலம்பெயர்ந்த சமூகத்தின் தேவையை நிவர்த்தி செய்யும் என்று சொன்னால் மைய அரசியலில் விலகி இருப்பது போல் ஆகிவிடுமே ?. ஆஸ்திரேலிய மக்களில் பெரும்பான்மையானவர்களை உங்கள் கட்சியில் இருந்து விலகி இருக்க செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதே
செனட்டர் பேமன் : - இல்லை, ஏனென்றால் சராசரி ஆஸ்திரேலியர் உங்களை வித்தியாசமாக என்றும் பார்ப்பதில்லை. அவர்கள் உங்களை எல்லோரையும் போல் சக ஆஸ்திரேலியராகவே பார்க்கிறார்கள். ஆனால் சிறுபான்மை இனவாதிகள் மற்றும் மதவெறியர்கள் இருக்கிறார்கள் அல்லவா ? அவர்கள் தீவிர வலதுசாரி வெள்ளை மேலாதிக்க மனநிலையால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் சராசரி ஆஸ்திரேலியர்களுக்கு புலம்பெயர்ந்த சமூகத்தின் மேல் எந்தப் பிரச்சினையும் இல்லை,நாம் ஒரு வெற்றிகரமான பன்முக கலாசார சமூகம்.
அகதிகள் அல்லது படகு மூலம் புலம்பெயர்ந்து வரும் மக்கள் குறித்தான தவறான அபிப்பிராயங்கள் இங்கே பரப்பப்பட்டுள்ளன . ஹோவர்டின் காலத்தில் படகுகளின் மூலம் புலம்பெயரும் மக்களை தவறானவர்கள் என்று பயமுறுத்தும் பிரசாரம் இருந்தது. என் அப்பா படகில் இங்கு வந்தார். அவர் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவோ பங்களித்தார். அவர் நேர்மையான குடிமகனாக தனது வரிகளைச் செலுத்தினார். அனைத்து படகு வழி வரும் அகதிகளும் தடை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூற முடியாது . தங்கள் நாட்டில் வாழ வழியின்றி ,போக்கிடமின்றி, ஆஸ்திரேலியா நோக்கி புகலிடம் கோரி வரும் அகதிகளைப் பயமுறுத்தக் கூடாது . நான் பார்த்த பெரும்பான்மையான ஆங்கிலோ சாக்சன் வெள்ளையர்கள் மிகவும்நல்லவர்கள் .
புலம்பெயர்ந்தோர் மேல் அனுதாபம் கொண்டவர்கள். அவர்கள் இருகரம் கூப்பி அகதிகளை ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்கள் . இங்கே ஆஸ்திரேலியாவில் படகுகளில் பயணிக்கும் உண்மையான அகதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , கடத்தல்காரர்கள் அவர்களை சாதகமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதே நேரத்தில் நமது குடியேற்ற அமைப்பையும் சரி செய்ய வேண்டும். தொழிலாளர் கட்சியின் ’90 நாட்களில் அகதி விசாரணை முடிவை எடுப்போம்’ என்ற வாக்குறுதி என்ன ஆனது ? . ’ பெரும்பான்மையான புகலிடம் கோரிய மக்கள் பல வருடங்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை விட்டு விலகி, எந்த வேலையும் செய்ய முடியாமல் , வேலை செய்யும் உரிமைகள் இல்லாமல் , குடியேற உரிமை இல்லை மற்றும் வீடு வாங்க உரிமை இல்லை என்று பல்வேறு கொடுமைகளை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்கள் . இது பெருந்துன்பம்.
எதிரொலி : - அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலது சாரி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்தச் சூழலில் மெல்பேர்ன் மற்றும் பிற பகுதிகளில் வளர்ந்து வரும் நவ நாஜி ( Neo -Nazi ) கலாசாரம் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன ? இவர்களிடமிருந்து புலம்பெயர்ந்த சமூகத்தினரை எவ்வாறு காப்பது ?.
செனட்டர் பேமன் : - நாங்கள் இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து வருகிறோம், புலம்பெயர்ந்தோர் குறிப்பாக மத்திய கிழக்கு பின்னணியில் அல்லது மாநிற நிறத்தில் உள்ளவர்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள் . அவுஸ்திரேலியாவில் நாங்கள் சமூக ஒற்றுமையைப் பற்றி பேசுகிறோம், கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மாறாக நாம் ஒவ்வொருவருக்கும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. நாம் எல்லாவற்றிலும் உடன்பட வேண்டிய அவசியமில்லை.
எந்தக் கட்சியுடனும் சேராமல் நான் நடுநிலை முடிவை எடுத்தபோது, எனக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தன . என் மதத்தை ஏன் ஆயுதமாக்குகிறாய்? ஏன் உன்னை வேற்றுக்கிரகவாசி போல் காட்டுகிறாய்? என்று எவ்வளவோ எதிர்ப்புகள் . எனது வெற்றியை கொண்டாடிய அதே தொழிலாளர் கட்சி, ஒரு பயங்கரமான நபராக என்னைச் சித்திரிக்க செய்ய என்னவெல்லாம் முயற்சி செய்தார்கள்
பன்முக கலாசார ஆஸ்திரேலியாவின் பார்வையில் தொழிலாளர் கட்சி மரியாதையை இழந்துவிட்டது. ஏனென்றால் மக்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை செய்யும் போது, நீங்கள் அவளை மதித்தீர்கள் . நீங்கள் அவளையும் உங்கள் குழுவில் இணைத்து மகிழ்ச்சியுடனிருந்தீர்கள். ஆனால் இப்போது அவள் தன் சொந்தக் குரலைக் கண்டுபிடித்து, கொள்கை அடிப்படையில் அவள் உங்களுடன் உடன்படவில்லை என்றதும் அவளைப் பேருந்தின் கீழ் தூக்கி எறியத் தயாராக இருக்கிறீர்கள் .
பூர்வகுடி மக்களின் குரல் வாக்கெடுப்பில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும், , உதாரணமாக, இஸ்லாமோஃபோபியா இங்கே வெகு சாதாரணமாக இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை பற்றி பேசவே மக்கள் பயப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மீது யூத எதிர்ப்பாளர்கள் என்ற சாயம் பூசப்பட்டுவிடலாம். ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ள பாலஸ்தீன துவேஷ அல்லது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு சாதாரணமாகிவிட்டது. புலம்பெயர்ந்தோர் என்றால் ’வாயை மூடிக்கொள்ளுங்கள், வம்பு செய்யாதீர்கள், எதற்கும் குறை சொல்லாதீர்கள்.
இந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்’என்றுதானே இவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்
மேலும் புலம்பெயர்ந்த சமூகங்கள் மீது இவ்வாறு மோசமான வெறுப்பையும் பிறவற்றையும் பரப்பும் அரசியல்வாதிகளின் எண்ணங்கள் மாறவேண்டும் . . அப்படியானால், புதிய நாஜிக் குறியீடுகளுக்குத் தடை விதிப்பதோடு மற்றொரு இனக் குழுவைப் புண்படுத்தக்கூடிய வெறுப்புச் சின்னங்கள் மற்றும் செயல்கள் எல்லாமே தடை செய்யப்பட வேண்டும் .
ஆனால், மதப்பாகுபாடு சட்டத்தின் மூலமாகவோ அல்லது மனித உரிமைச் சட்டத்தின் மூலமாகவோ அவதூறு தடுப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும். அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியும், எனக்கு சீக்கியப் பின்னணியில் இருந்து வந்த நண்பர்கள் கிடைத்துள்ளனர், அவர்கள் தங்கள் தலைப்பாகை அணிவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு இஸ்லாத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால். மொத்த சூழ்நிலையிலும், இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும்போதும், அவர்கள் முஸ்லிம்கள் என்று தவறாகக் கருதப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அவமதிக்கப்படுகிறார்கள், அது அர்த்தமற்றது. அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்த அநியாயத்துக்கு எதிராக உறுதியுடன் செயற்படுவேன் .
எடுத்துக்காட்டாக, மனித உரிமைச் சட்டத்தின் கீழ் மக்களுக்குத் தகுதியான பாதுகாப்பை வழங்கும் மசோதாக்களை முன்வைக்க தொடர்ந்து போராடுவேன்.
எதிரொலி : - ஆம், காசா மோதல் மற்றும் இனப்படுகொலை நடப்பதைப் பற்றி நாங்கள் பேசும் அதே வேளையில் உலகளவில் நிகழும் இனப்படுகொலைச் செயல்களை ஒப்புக்கொண்டு பதிலளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இன்று காஸாவில் நடக்கிறது தானே இலங்கையில்அன்று நடந்தது . ஆஸ்திரேலிய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
செனட்டர் பேமன் : - இது ஒரு இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அரசாங்கம் முதலில் தைரியமாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இனப்படுகொலை இஸ்ரேலால் பாலஸ்தீனத்தில் மட்டும் நடைபெறவில்லை, உலகம் முழுவதும் நடைபெறுகிறது. நாம் உலகம் முழுவதிலும் நடக்கும் அநீதிகளைப் பார்க்கிறோம், ஆக்கிரமிப்பு சக்திகள் அப்பாவி மக்களைத் துன்புறுத்துகிறது நாம் பார்க்கிறோம் அல்லவா .
எனவே, குறிப்பாக காஸாவைப் பொறுத்தவரையில், ஒடுக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு நமது அரசாங்கம் இஸ்ரேலை வற்புறுத்த வேண்டிய கடமை இருக்கிறது .அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவும் அதன் இறையாண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் நமது சொந்த தேசிய வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். அந்த கொள்கையானது நமது நலன் சார்ந்து இருக்க வேண்டுமேயொழிய அமெரிக்கா , இஸ்ரேல் அல்லது வேறு வெளி நட்பு நாடு அல்லது சக்தியின் நலன்களுக்காக இருக்க கூடாது. நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல் இங்கே வெளிப்படையான இரட்டை நிலை உள்ளது. உக்ரேனிய அகதிகள் ஏற்கப்படும் விதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள், அவர்களுக்கு புகலிட வாய்ப்புகள் எளிதாக இருந்தன. . உய்குர் மக்கள் மீது சீன அரசாங்கம் திணித்த மீறல்கள் மற்றும் பல தசாப்தங்களாக அது எவ்வாறு நடந்து வருகிறது என்பதைப் பற்றி பேசும் உய்குர் பின்னணியைச் சேர்ந்த பெண்ணை நான் சந்தித்தேன்..
எனவே, நீங்கள் சொன்னது போல், இனப்படுகொலை என்பது காஸாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் உள்ளது.ஆஸ்திரேலிய அரசாங்கம் மனித உரிமை சட்டங்களை செயல்படுத்துவதற்கும் மதிப்பதற்கும் மற்றும் அந்த சட்ட மீறல்களை வெளியே கொண்டுவருவதற்கும் மிகவும் தைரியமான பங்கை எடுக்க வேண்டும், ஏனெனில் சர்வதேச மனிதாபிமான சட்டம் அழகாக இருக்க மட்டும் இல்லை. நீங்கள் வெள்ளை , கருப்பு .மாநிறமாக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான மனித உரிமைகளை நாங்கள் நிலைநிறுத்துவது மற்றும் நடைமுறைப்படுத்துவதும் எங்களது கடமையாகும்.
எதிரொலி : - இப்போது நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் முக்கியமான அதிகாரிகளின் தேர்வு அதிர்ச்சியடையவைக்கிறது . உலக அரசியல் எவ்வாறு நகரும் என்பதை நினைக்கும்போதே பதறுகிறது , மேலும் காசா மோதல் கடைசியாகப் போகிறது. உங்களுக்குத் தெரியும், காசா யுத்தம் கடந்த 13 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு ஆஸ்திரேலிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள் ?
செனட்டர் பேமன் : இந்த முடிவுகள் பேரழிவை ஏற்படுத்தப் போகின்றன என்பதை எண்ணிக் கவலை கொள்கிறேன். அமெரிக்கத் தேர்தல்கள் முடிவுகள் இங்கே நமது அரசியல் அமைப்புச் செயல்படும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கத் தூதர் கெவின் ரூட்டிற்கு என்னவாகும் என்று தெரியவில்லை , ஏனென்றால் கெவின் ரூட்டுக்கும் டிரம்ப்புக்கும் இடையேயான பிணக்கு நமக்குத் தெரியும் . அதனால் அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பப் போகிறாரா, இல்லை தூதராகத் தொடர்வாரா என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ட்ரம்பின் சில கொள்கைகள் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக இருக்கின்றன . அது கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வேறுபட்ட சமூகங்களுக்கு எதிரானவை மட்டுமல்ல , உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானது என்பதை நான் அறிவேன்.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்,’ பல பில்லியன் டொலர் மதிப்புள்ள AUKUS ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று .ஏனெனில் பில்லியன் கணக்கான டொலர் செலவழித்து உருவாக்கும் நீர்மூழ்கிகள் நமக்கும் எந்தப் பயனையும் அளிக்கப்போவதில்லை பயனளிக்காது. எனவே அந்தப் பணத்தில் கொஞ்சம் கிடைத்தாலும் நமது பல பிரச்சினைகளைச் சரி செய்ய முடியும் . குறிப்பாக அகதிகள் குடியேற்றப் பிரச்சினை , வாழ்விடப் பற்றாக்குறை நெருக்கடி மற்றும் பல.
எதிரொலி : - என்னுடைய அனுபவத்தில் உங்களைப் போன்ற துணிச்சல் வாய்ந்த அரசியல்வாதியைப் பார்த்ததில்லை. தான் நம்பும் கொள்கைக்காக ,தனது இனத்திற்காக கட்சியை துறந்தவர் நீங்கள் . எங்களைப் போன்ற புலம்பெயர்ந்த சமூகத்திற்கு உங்கள் செய்தி என்ன? அவர்கள் எப்படி ஆஸ்திரேலிய அரசியலில் ஈடுபட வேண்டும் ? , அவர்களின் கவலைகள் எவ்வாறு அரசாங்கத்தால் கேட்கப்பட வைக்க முடியும் ?
செனட்டர் பேமன் : - இங்குள்ள அனைத்து பன்முக கலாசார சமூகங்கள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு எனது செய்தி என்னவென்றால் ’உங்கள் குரல் முக்கியமானது. நான் உங்கள் பின்னால் என்றும் இருப்பேன்’
எந்த அரசாங்கமோ அல்லது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற அமைப்புகளோ தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக உங்களை நம்ப வைக்க விரும்பினாலும், அதிகாரம் என்பது எப்போதும் மக்களிடம் மட்டுமே உள்ளது என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். எனவே நாம் நமக்கான அரசியல் அமைப்பில் ஈடுபட வேண்டும். அதனால் உள்ளாட்சி, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் எதாவது அமைப்பில் ஈடுபட்டு தொண்டாற்ற முடியாவிட்டாலும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் .நீங்கள் வாக்களிக்காமல் போனால் உங்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் .
உங்கள் குறைகளை சீண்டுவார் யாருமிருக்கமாட்டார்கள் . நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களின் சுயவிவரங்கள் மற்றும் கொள்கைகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும், ஏனெனில் அப்படிப் பார்க்காமல் வாக்களித்தால் அவர்கள் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை.
எங்கள் புலம்பெயர்ந்த சமூகங்கள் உண்மையில் விழிப்புணர்வுடன் இருப்பதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.தேர்தல் நேரம் நெருங்கி வருகிறது. நீங்கள் கீழ்சபையில் லேபர் கட்சிக்கு வாக்களித்தாலும் , செனட் சபையான மேல்சபையில் நீங்கள் ஆஸ்திரேலியாவின் குரலுக்கு வாக்களிக்கலாம். அப்பொழுது தான் பல்வேறு சமூகங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் .உங்களின் குரலாக தொடர்ந்து தொண்டாற்ற முடியும் .கடந்த நாட்களில் கூட, தமிழ் அகதிகள் சங்கத்தை சார்ந்த தலைவர்களை சந்தித்தேன் .
அது தொடர்பாக நான் குடிவரவு அமைச்சருக்கு கடிதம் எழுதினேன், நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருக்கும் தமிழ் அகதிகள் மற்றும் விசா அந்தஸ்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய முடிவைப் பெறுவதற்கு தொடர்பான விடயங்களை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டோனி பர்க்கிற்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். ஏனென்றால், துரதிர்ஷ்டவசமான இரண்டு தமிழ் இளைஞர்களின் மரணத்திற்குப் பிறகும் அரசாங்கம் மிகவும் மெத்தனமாக இருப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.