ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்த flydubai FZ1073 விமானத்தின் துணை விமானி, கோடாரியால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹம்மாம் அல்-ஹம்மாமி (Hammam al-Hammami) என்பவரே அந்த துணை விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தில், துணை விமானி காக்பிட்டில் இருந்த அவசரகாலக் கோடாரியால் கேப்டனைத் தாக்கி, விமானத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்துள்ளார்.
விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த மாற்று பிளைதுபாய் விமானி ஒருவர் உடனடியாக விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். அங்கு சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட துணை விமானி, வியாழக்கிழமை அபுதாபிக்குக் கொண்டுவரப்பட்டார்.
விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பான்மையானோர் இஸ்ரேலிய குடிமக்கள் ஆவர். இச்சம்பவம் தொடர்பாக அமீரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலிய அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்கவுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக தலைவரின் மூத்த ஆலோசகர் அன்வர் கர்காஷ் இதுகுறித்துக் கூறுகையில், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதப் பேச்சுகளுக்குத் தங்கள் நாட்டில் சகிப்புத்தன்மை கிடையாது என்றும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.