சவூதி விமான நிலையங்கள்மீது ஹவுதிகள் தாக்குதல்: மூவர் பலி
ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினருக்கும் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், அபா (Abha) விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்றுள்ள போதிலும், எந்தத் தாக்குதல் எந்த நாளில் இடம்பெற்றது என்ற விபரங்களை அதிகாரசபை குறிப்பிடவில்லை.
இத்தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ள சவூதி தலைமையிலான கூட்டிணைவுப் படைகள், இச்செயல் தண்டனையின்றி தப்ப முடியாது எனக் கூறியுள்ளன.
புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், சாடா, ஹொடைடா, ஜவ்ஃப் மற்றும் மாரப் ஆகிய மாகாணங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ஹூதி இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூட்டிணைவுப் படைகள் தெரிவித்துள்ளன.