பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்த விபத்தில், 13 வயதிற்கும் குறைவான 27 மாணவர்கள் , ஒரு ஆசிரியர் உட்பட குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லேடி ரீடிங் மருத்துவமனைக்குக் (Lady Reading Hospital) கொண்டு வரப்பட்டபோதே உயிரிழந்திருந்ததாகவும், காயமடைந்த 20 பேர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.
வடக்கு நகரின் திர் காலனி பகுதியில் அமைந்துள்ள Al-Khair Education Center என்ற தனியார் பாடசாலையி லேயே இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அரசு அதிகாரி பிலால் பைசி தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் மேல் தளத்தின் கூரை இடிந்து முதல் தளத்தின் கூரை மீது விழுந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது இடிபாடுகள் விழுந்ததாகவும் மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து ரத்தக் காயங்களுடன் மாணவர்களை மீட்புக் குழுவினர் வெளியேற்றும் காட்சிகள் தொலைக்காட்சி நேரலையில் வெளியாகின.
"இதுவரை இடிபாடுகளுக்கு இடையே இருந்து குறைந்தது 45 குழந்தைகளை வெளியே எடுத்துள்ளோம்" என்று மாவட்ட அவசரக்கால அதிகாரி இப்திகார் கான் தெரிவித்துள்ளார். மேலும், பல குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.