ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கெப்ரோன் (Hebron) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
டெலம் (Telem) குடியேற்றப் பகுதிக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இருப்புப் படைப் பிரிவினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இச்சம்பவத்தில் குறைந்தது ஆறு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இஸ்ரேலின் அவசர ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இஸ்ரேலியத் தேர்தலை முன்னிட்டு, பாலஸ்தீனப் பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
olive பழ அறுவடையில் ஈடுபடும் பாலஸ்தீன விவசாயிகள் மீது இஸ்ரேலியக் குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதல்கள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளன.
கெப்ரோனைச் சுற்றியுள்ள பல ராணுவச் சாவடிகளில் ஒன்றிற்கு அருகில், இஸ்ரேலியப் பதிவு எண் கொண்ட காரில் வந்த பாலஸ்தீனர்கள், ராணுவத்தினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்த இந்த மோதலால், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தாமதமானதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரு பாலஸ்தீனர்களைக் கைது செய்துள்ள இஸ்ரேலிய ராணுவம், கெப்ரோன் நகரை முழுமையாக முடக்கியுள்ளது .
இந்தத் தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார நிகழ்வுகளை ரத்து செய்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது குறித்து விரைவில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.