ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்திவிட்டு, 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் தலிபான்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் வியாழக்கிழமை எடுக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் வழக்குத் தொடுநர் தரப்புக்கு குறிப்பிடத்தக்க தடைகள் இருப்பதாக நீதிமன்றம் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் நெதர்லாந்தின் ஹேக் நகரைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் படையினர் தொடர்பான போர்க்குற்ற விசாரணை மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவுகள் காரணமாக, தற்போதைய மற்றும் முன்னாள் நீதிமன்ற அதிகாரிகள் 13 பேருக்கு அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.
இந்தத் தீர்மானத்தின் மூலம் அமெரிக்கப் படைகள் தொடர்பான விசாரணை மட்டுமன்றி, ஆப்கானிஸ்தானின் கோரசான் மாகாணத்தில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பின் கிளை (ISKP) தொடர்பான விசாரணையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக ஏற்கெனவே மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுநர் அலுவலகம் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைக்க அமெரிக்கா எச்சரிக்கை
"அமெரிக்கர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்" என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ முன்னர் தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்கர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும் வரை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் படிப்படியாகக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
அமெரிக்கப் படைகள் தொடர்பான விசாரணையை நிறுத்துவதற்கான நீதிமன்றத்தின் தற்போதைய தீர்மானம், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகள், தலிபான்கள், அமெரிக்கப் படைகள் மற்றும் அமெரிக்க வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகள் இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்கள் இந்த விசாரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.