ArticlesCommunityHealth

கோபமெனும் பொல்லாப் பெருந்தீ!

மனிதர்கள் எல்லோருக்குமே கோபம் என்ற உணர்வு வராமல் இருக்காது. அப்படி அடிக்கடி மனிதர்களால் வெளிப்படுத்தப்படும் கோபம் தான் , உலகில் பல பிரச்சினைகளுக்கு , முக்கியமாக யுத்தங்களுக்கு வித்திடுகின்றது. கோபமென்ற உணர்வை இயல்பான ஒன்றாக நினைத்து சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் உளநோய்கள் பலவற்றுக்கும் கோபமே முன்னறிகுறியாகவும் கொள்ளப்படுகின்றது. அப்படிப்பட்ட கோபத்தை எப்படித் தவிர்க்கலாம், கோபத்தால் உண்டாகும் விளைவுகள் யாவை என்பன பற்றி எதிரொலி வாசகர்களுக்காக விரிவாக எடுத்துரைக்கிறார் மனோதத்துவ நிபுணர் ரைஸ்.

கோபம் என்பது என்ன? அது ஒரு உணர்வு , ஆற்றல். அது பெரும்பாலும் அழிக்கும் ஆற்றலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அறச்சீற்றம் என்பதும் கோபம் தான், அது சமுதாயத்தில் நடக்கும் தவறுகளைப் பார்த்து வருவது. அதனால் தான் பாரதியார் கூட ‘ரௌத்திரம் பழகு’ என்கிறார்.

ஆனால் சினம் எனும் கோபம் அடுத்தவர்களை தாக்க எறியப்படும் ஆயுதமானாலும் அது எய்தவனையே அதிகம் தாக்குகிறது. அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்,

‘தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்’

அதாவது, ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

சில பேர் சினத்தை மற்றவர்களிடம் காட்ட விரும்பாவிட்டாலும் அதை தம்மை நோக்கிச் செலுத்தி ,தம்மையே காயப்படுத்திக் கொள்வர். உதாரணமாக சங்க காலத்து புலவர் சீத்தலை சாத்தனாரைச் சொல்லலாம். அவர் பிற நூல்களில் ஏதாவது பிழைகள் காணப்பட்டால், அந்தப் பிழைகளை ஏற்படுத்தியோரை குற்றம் கூறுவதற்கு பதிலாக ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று வருந்தித் தமது தலையை தானேக் குத்திக் கொள்வாராம். அதனால் அவரது தலை புண்பட்டுச் சீழோடிருந்தமையால் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டாராம்.

தன் மீதே திருப்பிவிடப்படும் கோபம் தான் தற்கொலை என மனநல இலக்கியத்தில் கூறப்படுகிறது.

கோபம் எதனால் ஏற்படுகிறது? கோபம் என்பது ஒரு மனிதனின் பதற்றம் மற்றும் இயலாமையின் வெளிப்பாடு தான். பெரும்பாலும் கோபம் அப்படி இயலாமையில் ஏற்பட்டாலும் சில மனநோய்களிலும் கோபம் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. பொதுவாக ஆளுமைக் கோளாறு கொண்டவர்களின் மனநிலையில் ஏற்படும் சடுதியான மாறுதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற காரணங்களால் கோபம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் இருப்பவர்களுக்கும் பதற்ற நோய் இருப்பவர்களுக்கும் பருத்திக் கொட்டையிலிருந்து பட்டென பஞ்சு வெடிப்பது போல கோபம் வெளிப்படும். அது போல இருமுனைப் பிறழ்வு நோய் இருப்பவர்களுக்கு மனவெழுச்சி இருக்கும் போது கோபம் தான் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. மனச்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு மாயக்குரல் கேட்பதாலோ, மாய எண்ணத்தினாலோ கோபம் வரலாம். அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அது போலத் தான் மனவளர்ச்சி குன்றியோரும் ’டிமன்ஷியா’ எனும் மறதி நோய் உள்ளவர்களுக்கும் இயலாமையாலும் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாததாலும் கோபம் வரலாம்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் என்னென்ன?

முதலில் கோபம் என்பது மற்ற உணர்ச்சிகள் போல ஒரு உணர்ச்சி தான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எப்படி சிரிப்பு வந்தாலும் நாகரிகம் கருதி சில இடங்களில் சிரிப்பை அடக்கிக் கொள்கிறோமோ அது போல கோபத்தையும் அடக்க முயற்சிக்கலாம். எதையும் சொல்லும் முன்னும் ,ஒரு சில நொடிகள் என்ன சொல்லப் போகிறோம்?,எதனால் அதை சொல்லப் போகிறோம்? என யோசிக்கலாம்.
யோசிக்கக் கிடைத்த அந்த சில நொடிகள் முடிந்தவுடன் தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக மற்றவருக்கு புரியும் படி எப்படி சொல்லலாம் என யோசிக்கலாம். சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகச் சொல்ல வந்ததை மற்றவரின் மனம் புண்படாதவாறு சொல்லலாம்.

சொல்ல வந்ததை அந்தச் சூழ்நிலையில் நிதானமாக,தெளிவாகச் சொல்ல முடியாது என நினைக்கும் பட்சத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேறி ஒரு சிறு நடை போட்டுவிட்டு வரலாம்.

இன்னும் சொல்லப் போனால், சில சமயங்களில், சொல்ல வந்ததை உடனே சொல்ல வேண்டுமென அவசியமில்லை. இன்னும் சற்று நேரம் எடுத்து, சிந்தித்து அல்லது தெளிவாக ஒரு காகித்தில் எழுதிப் பார்த்து, அதைப் பயிற்சி செய்து பின் சொல்லலாம்.

கோபப்படுத்திய விடயத்தை மறந்து, அதற்கு காரணமாக இருந்த பிரச்சினைக்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என யோசிக்கலாம். உங்களால் எதனை மாற்ற முடியும் எதனை மாற்ற முடியாது எனும் உண்மை நிலையை ஆராய்ந்து உணர முயற்சிக்கலாம். கோபம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தும் என்பதை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம்.

நமது கோபத்துக்கு நமது செயலுக்கு மற்றவர் மீது பழி போடுவதை விடுத்து முதலில் நம் செயலுக்கோ கோபத்துக்கோ நாம் பொறுப்பெடுத்து பழக வேண்டும். உதாரணமாக அலுவலகத்துக்கு தினம் நேரம் கழித்து போவதால் கடிந்துகொண்ட முகாமையாளர் மீது கோபப்படுவதை விடுத்து முதலில் உங்கள் செயலுக்கு பொறுப்பெடுத்தால் கோபத்தின் வீச்சு குறையும், தீர்வு பிறக்கும்.

கோபம் நம்மை நாமே காயப்படுத்தும் செயல் என நாம் அறிவோம். கோபப்படுவதால் நமது உடலில் ’கார்டிசால்’ எனும் இரசாயனம் அதிகம் சுரந்து உடல் உறுப்புகளைக் காயப்படுத்துகிறது. பலருக்கு கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் நம்மை அழிக்கும் கோபத்தை விட்டு, மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதும் அவர்களை மன்னிப்பதும் தான் நமக்கு நல்லது அப்படித் தானே? அது உறவையும் மேம்படுத்துமல்லவா?

கோபத்தை சில நேரங்களில் நகைச்சுவையாக மாற்றி வெளிப்படுத்தலாம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்த மாதிரியும் இருக்கும், மனக்காயம் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். சார்லி சப்ளின் போன்ற நகைச்சுவை கலைஞர்கள் ஃபாசிசத்தின் மீது உள்ள கோபத்தை நகைச்சுவை மூலமே வெளிப்படுத்தினர். இன்றைய காலத்தில் பல மீம்ஸ் வகை நகைச்சுவைகள் இந்த வகையைச் சார்ந்தவை என சொல்லலாம். ஆனால் உருவக் கேலி செய்வதையோ எள்ளல் வகையில் கிண்டல் செய்வதையோ தவிர்க்க வேண்டும். அது பகையை அதிகரிக்கும்.

கோபம் வரும் போது சில பேருக்கு இசை கேட்பதோ, தியானம் செய்வதோ, ‘நான் அமைதியை விரும்புகிறேன்’ எனத் திரும்ப திரும்ப மனதுக்குள் சொல்வதோ, முறையான மூச்சுப் பயிற்சி செய்வதோ உதவும். சில பேருக்கு தனது எண்ணங்களை ஒரு டயரியில் எழுதுவதால் கோபம் குறையலாம். பொதுவாக உடல் நலத்தை பேணி, தூக்கத்தையும் பேணி, தினமும் தேவையான அளவு உடற்பயிற்சியும் செய்து ஆரோக்கியமான உணவு உண்டு வந்தாலும் நல்லது தான்.

கோபம் என்பது சில பேருக்கு கட்டுக்கடங்கா வெள்ளம் போல அல்லது ஒரு எரிமலை போல வெளிப்படும். தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும் பட்சத்திலும் கோபத்தால் தனது அமைதியும் சுற்றி இருப்பவர்களின் அமைதியும் கெடுகிறது எனும் பட்சத்திலும் உதவியை நாடுங்கள். கோபம் என்பது எல்லா உணர்ச்சிகளையும் போல ஒரு உணர்ச்சி தான். அதை நல்ல முறையில் மடைமாற்றி அமைதியடைய எல்லோராலும் முடியும் எனும் உண்மையை நம்புவோம் .

Related Articles

Back to top button