இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அத்துடன், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல் டெல்லி - என்சிஆர் மற்றும் பிஹார் தலைநகர் பாட்னா, மாநிலத்தின் வட பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. அண்டை நாடான நேபாள தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீட்டை வீட்டு வெளியேறி வீதிகளில் நின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காத்மண்டுவில் வசிக்கும் மீரா அதிகாரி என்பவர் கூறும்போது, “நான் தூங்கிக்கொண்டிருந்தேன். என் படுக்கை அசைந்தது, நான் எனது குழந்தை விளையாடுகிறது என்று நினைத்தேன். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜன்னல்கள் ஆடியதும் அது நிலநடுக்கம் என்று புரிந்து போயிற்று. உடனடியாக நான் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி திறந்த வெளியில் நின்றேன்.” என்றார்.