ArticlesIndia

இதயம் கவர்ந்த கள்வன்…!

நச்சினார்கினியன்

“அதிகாரம் ஊழல் செய்யவே முனையும், முழுமையான அதிகாரமோ முற்றிலும் ஊழலில் திளைக்கும்.”
– ஜான் டல்பெர்க்-ஆக்டன்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது . அது 2001 வருடம் ஜூன் மாதம் ” ஐயோ என்னைக் கொல்லப் பாக்குறாங்க ” என்ற மாபெரும் கைது நாடகச் சம்பவம் நடந்தேறியது. இது 2023 வருடம் ஜூன் மாதம் , அதே போன்று ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது சம்பவம் . இப்பொழுதோ நெஞ்சை பிடித்துகொண்டு கண்களை மறைத்து “நெஞ்சு வலிக்குதே ” என்ற மற்றுமொரு நாடகமும் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்பிற்கிடையே மிக நன்றாக நடந்தேறியது.

முன்னவர் நம் தமிழைக் காக்க வந்த தமிழினக்காவலர் . பின்னவர் இந்நாள் அமைச்சர் ( தற்பொழுது இலாகா இல்லாத ) . 22 வருடங்கள் கடந்தாலும், அரசாங்கங்கள் மாறினாலும் ஊழல் பேர்வழிகளும், நாடகங்களும் மாறவில்லை. இந்தக் கைதுச் சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்த ஊடக இரைச்சல்கள் , கழகக் கண்மணிகளின் ஒன்றியச் சவால்கள் மற்றும் சங்கிகளின் தொடர்ந்த ஊழலுக்கு எதிரான போர்முழக்கங்கள் எல்லாம் ஒருவாறு ஓய்ந்தபிறகு இந்தச் சம்பவத்தை பற்றியும் ,அது தொடர்பான காரண காரியங்கள் மற்றும் விளைவுகளும் என்னவாக இருக்கலாம் என்பது பற்றி நடுநிலையாக ( அல்லது சமன் நிலையில் ) எழுதவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இந்த கைதுச் சம்பவத்தைப் பற்றி எழுதுவதற்கு முன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை குறித்தும் , இந்த வழக்கினைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் கரூரில் பிறந்த செந்தில் பாலாஜி 1995ஆம் ஆண்டு தி.மு. க. வில் சேர்ந்தார் (பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஒருவேளை கழகத்தில் சேர்வதற்கு எந்தப் படிப்பும் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம் ) . ஐந்து வருடங்கள் ஓயாமல் பொதுச்சேவை ( ?) செய்த பிறகு, தனக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது என்று தெரிந்த பிறகு 2000 ஆம் ஆண்டு அ.தி.மு.கழகத்தில் இணைகிறார் . ( இந்த இரண்டு கழகங்களுக்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கலாம். முன்னது குடும்பச் சொத்து. அவ்வளவு மட்டுமே ) பின்னர் குறுகிய காலத்தில் படிப்படியாக முன்னேறி ,அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகிறார்.

இதன் பிறகு அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பிலிருந்தும் 2015 இல் நீக்கம் செய்யப்படுகிறார் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் டி. டி. வி. தினகரன் ஆதரவாளராக இருந்து எந்தப் பலனும் கிடைக்காத நிலையில் 2018 ல் மறுபடியும் திமுகவில் ( தி.மு.க -> அ. தி.மு.க -> அ.ம.மு.க -> தி.மு.க ) இணைகிறார். வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி என்பதை நாம் இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும் . பிறகு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, திமுக அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய திட்டத்தை அரசரிடம் (வடிவேலு ) விளக்கிக் கொண்டிருப்பார்கள். அரசன் அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; இதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான். இயக்குனர் சிம்புதேவன் மிக சாதுர்யமாக எல்லா அரசியல்வாதிகளையும் நக்கல் செய்திருப்பார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில் எல்லா அரசியல்வியாதிகளையும் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள் . கமிஷன் / லஞ்சம் வாங்குவது என்பது எங்கள் தார்மீக உரிமை என்று எப்போதும் கருதிய அமைச்சர் அவர்கள் , தான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில் ,அரசு வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டு பணிக்கு ஆட்களை சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கையூட்டு கொடுத்தும் வேலை கிடைக்காதவர்கள் எழுப்பிய புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு காவல்துறை தயாரித்த குற்றப்பத்திரிகையில் இவர் பெயரில்லை. பிறகு பணம் கொடுத்தும் வேலை கிடைக்காதவர்கள் அளித்த குற்றமனுவின்படி பல்வேறு இழுபறிகளுக்கிடையே, இறுதியாக 2021ல் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் 2021ல் பதவியேற்ற தி.மு.க .அரசு அமைச்சரவையில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட செந்தில்பாலாஜி மறுபடியும் அமைச்சர் ஆகிறார். இரண்டே மாதங்களில் வழக்கில் தொடர்புடையவர்கள் சமரசம் செய்து கொண்டதால் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து ஜூலை 2021ல் தீர்ப்பு வழங்கியது.

இந்த மாதிரி கண்டிப்பாக நடக்கும் என்று முன்கூட்டிய கணித்த அமலாக்க இயக்குனரகம் இந்தத்தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே , சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறது. பல்வேறு காலதாமத இழுபறிகளுக்குக்கிடையே இந்திய உச்ச நீதிமன்றம் தலையிட்டு ,அமலாக்க துறைக்கு விசாரணை அளிக்க ஒப்புதல் அளித்து உத்தரவிடுகிறது.

அமலாக்க அதிகாரிகள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய பிறகு ,செந்தில் பாலாஜியைக் கைது செய்கையில் இதய வலியால் அவதியுறுவதாகஅவர் கூறியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் நலம் தேறிவருகிறார் . இதன்பிறகு தமிழக முதலமைச்சர் செந்தில்பாலாஜி துறைபொறுப்பற்ற (?) அமைச்சராக தொடர்வார் என அறிவித்ததன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆணை பிறப்பித்து பதவியைத் திரும்பப் பெற்றிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஆளுநரின் செயலை சட்டப்படி எதிர்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் .

இதையொட்டி தமிழ்நாட்டில் எப்பொழுதும் போல எல்லாப் பக்கமும் கூச்சல் ,குழப்பங்கள் தொடர்ந்தன. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ,”வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று சூளுரைத்தார்.இதே முதல்வர்தான் 2016 தேர்தலில் செந்தில் பாலாஜி குறித்து வண்டிவண்டியாக ஊழல் குற்றம் சாட்டினார். ( அது வேற வாய் ) . இந்தக் கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் என காங்கிரஸ் ,தி.மு.க ,கம்யூனிஸ்ட் ,நாம் தமிழர் சீமான் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டித்திருக்கின்றனர் .

அ.தி.மு.க இந்த விஷயத்தில் மிகவும் அடக்கியே வாசிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களின் எதிரணி ,குற்றம் நடந்ததோ செந்தில் பாலாஜி அ.தி.மு.க.அணியில் அமைச்சராக இருந்தபொழுது. மத்தியில் ஆளும் பா.ஜ.க வின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அவர்களின் அனைத்து ஊழல்களைப் பற்றியும் ( ரபேல் போர் விமானம் , அதானியின் வேதாந்த நிறுவனப் பங்கு மோசடி மற்றும் அவர்கள் ஆளும் மாநிலங்களில் நடந்த ஊழல்கள் ) அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகிறார்களே ஒழிய செந்தில் பாலாஜியின் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக ஒரு சொல் இல்லை. இடதுசாரிகளும் ஊழலை விட மதவாதமே பெரிது என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டதால் அவர்களிடமும் அரசியல் சரிநிலையை எதிர்பார்க்கமுடியாது.

ஆளும் மத்திய அரசும் இவ்வளவு நாள் ( அதாவது 2016 – 2021 ஆண்டு காலத்தில் ) நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஏன் துரிதமாக நடவடிக்கை எடுக்கிறது? . தமிழ்நாட்டு அரசும் ஏன் வழக்கினை நீதிமன்றத்தில் சந்திக்காமல் அமைச்சரை பாதுகாக்க பகீரதப்பிரயத்தனம் செய்கிறது ? குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையில் இருக்கும்போது ஏன் துறையற்ற மந்திரியாக தொடரவேண்டும் ? செந்தில் பாலாஜி கைதினை தொடர்ந்து அண்ணாமலையும் ,பா.ஜ.க வும் ஆடப்போகும் சதுரங்க விளையாட்டின் அடுத்த நகர்த்தல் என்ன ? திரைமறைவில் நடக்கும் அதிகார / அரசியல் பேரங்கள் என்னென்ன நமக்கு தெரிய வருமா ? யாமறியேன் ,யாமறியேன் பராபரமே.

எழுத்தாளர் சுஜாதா இருபது வருடங்களுக்கு முன்பு இந்திய அரசியல் பற்றி எழுதியது . இது இன்றும் மாறாமல் பொருந்துகிறது . ” வேறு தேர்ந்தெடுப்பு இல்லாத அஜனநாயக சூழ்நிலை. மாறி மாறி பழைய ஊழல்காரர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவரும் ஞாபகமறதி சார்ந்த அரசியல், மற்றவற்றையாவது ஓரளவுக்கு மாற்றமுடியும் என்று தோன்றுகிறது. இந்த நந்தி விலகவே இல்லை.” . இந்த நந்தி விலகவில்லை ,என்றும் விலகப்போவதில்லை . மக்களும் பயபக்தியோடு கும்பிட்டு , விலகிச் செல்லவும் பழகிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

 

Related Articles

Back to top button