வடக்கில் சுகாதார நடைமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை வடக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், பொலிஸாருக்குப் பணித்துள்ளார்.





அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள், முகக் கவசம் அணியாதோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





வடகக்கு மாகாணத்தில் கோரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.





நாட்டில் கோரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் இடம்பெற்றது.





சுகாதாரம், கல்வி, உள்ளூராட்சி, பொலிஸ் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர்.





வடக்கு மாகாணத்தில் நெடுங்கேணியில் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்த போதுமான இடவசதி இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.





மேலும் வடக்கில் இரண்டு சம்பவங்களால. கோரோனா பரவல் அச்சநிலை காணப்படுவதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.





கோரோனா தொற்று தொடர்பில் தேடப்பட்டவர் மன்னாரில் வந்து நடமாடியமை மற்றும் தென்னிலையில் தனிமைப்படுத்தல் இடங்களிலிருந்து வருகை தந்து தம்மை வெளிப்படுத்தாமல் இருப்போரால் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறப்பட்டது.





யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று நிலை கட்டுபாட்டுக்குள் உள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டினார்.





இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் கோரோனா தோற்று பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர், பொலிஸாருக்குப் பணித்தார்.