'இலங்கையில் 4.2 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி'

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

" கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய பின்னர் இலங்கையில் 4.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறும். இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது." - என்று  சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் 27/2 இன்கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட  கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" அரச வைத்தியசாலைகளில் 34 பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களும், ஆயிரத்து 20 மூச்சியக்கி இயந்திரங்களும் உள்ளன. அவசர சிகிச்சைப்பிரிவில் 704 கட்டில்களும் உள்ளன.  கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 25 பிசிஆர் இயந்திரங்களும், 220 மூச்சியக்கி (நடமாடும்) இயந்திரங்களும், 61 அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டில்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டன. இவை தற்போதைய நிலையில் போதுமானவையாக உள்ளன.எதிர்காலத்தில் தேவையேற்படின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.  உலக வங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.





தற்போது நாளொன்றுக்கு 11ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனையை துரிதப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் ஆரம்பமான நாள் முதலே அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகின்றோம். தடுப்பூசிக்கு உரிய அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் 20 வீதமானோருக்கு அது வழங்கப்படும். அதாவது 4.2 மில்லியன் பேருக்கு வழங்கப்படும்.





கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னும் மூன்றாம் கட்டத்தில்தான் உள்ளன. அதற்கான அனுமதி எப்போது வழங்கப்படும் என்பது எவருக்கும் தெரியாது. ஆனாலும் தடுப்பூசி தயாரானதும், அதனைப் பெற்று உரிய வகையில் பராமரிப்பதற்கு, வழங்கப்படவேண்டிய தரப்பினரை அடையாளம் காண்பதற்கு முன்னாயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.





தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் கீழ் மூன்று தொழில்நுட்ப குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன." - என்றார்.