மஹர கலவரத்தின் பின்னணியின் மர்ம கரம்?விசாரணைகள் ஆரம்பம்!

banner

மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டது யார், இதனுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பது உட்பட அனைத்து விடயங்களையும் கண்டறிவதற்கு சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" மஹர சிறைச்சாலையில் மட்டுமல்ல நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளில் அண்மைய நாட்களில் கைதிகள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.





போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிரித்துள்ளது. 11 ஆயிரம் பேர் இருக்கவேண்டிய இடத்தில் 32 ஆயிரம் பேர்வரை இருக்கின்றனர்.





கொரோனா 2ஆவது அலை மினுவாங்கொடையில் உருவானபோதே, சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டது, கைதிகளை பார்வையிடுவதற்கு வெளியாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு கைதிகள் கொண்டுசெல்லப்படுவது மட்டுப்படுத்தப்பட்டது. நவீன தொழில்நுட்பம்மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வெளியில் இருந்து பொருட்கள் கொண்டுவருவது தடுக்கப்பட்டது.





ஒக்டோபர் 27 ஆம் திகதிதான் முதலாவது சிறைச்சாலை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. புதிய கைதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சிறைகளுக்கு அனுப்பட்டனர். சிறு குற்றங்களுடன் தொடர்புடைய 600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.





சிறைச்சாலை கொத்தணிமூலம் நேற்றுவரை ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.  





அதேவேளை, மஹர சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தப்பியோட முயற்சித்துள்ளனர். இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளும் இருக்கின்றனர். சிறைச்சாலை சொத்துகளுக்கு கடும் சோதம் விளைவிக்கப்பட்டுள்ளனர். கடும் முயற்சிக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.





மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் திடீர் கரமொன்று இருக்கின்றது, எனவே, இதன் பின்னணியில் செயற்பட்டது யார் என்பது உட்பட அனைத்து விடயங்களும் கண்டறியப்படவேண்டும். சி.ஐ.டியினரிடமும் விசாரணைகள் ஒப்படைக்கப்படும்." - என்றார்.