யாழ். குடாநாட்டிலுள்ள தீவுகளுக்கு புதுப்பிக்க சக்தியூடாக மின்சாரம்

banner

யாழ் குடாநாட்டிலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு, அனலைத்தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்தி மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.





'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைய சுற்றுச்சூழல் நேய திட்டத்தில், குறைந்த விலையில் தொடராக மின்சாரம் வழங்கப்படவுள்ளது.





நம்பிக்கை, மற்றும் தரம்வாய்ந்த முறைகளில் மின்சாரம் வழங்குதலை முன்னிலைப்படுத்தியே தீவுப் பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளது.காற்று, சூரியன் போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி ஊடாக இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய மின் சக்தி அமைச்சும் சூரிய சக்தி, காற்று, நீர் மூலங்கள் ஊடான மின்னுற்பத்தி கருத்திட்ட அமைச்சும் இணைந்து,இதை ஆரம்பித்துள்ளது.





அந்த வகையில், யாழ் குடாநாட்டிலுள்ள நயினா தீவு, நெடுந்தீவு, அனலைத் தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமாக, மின்னுற்பத்தி செய்யப்பட்டு, அப்பிரதேசங்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மொத்தம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ரீதியில் விலை மனு கோரி, நியாயமான விலையில்,மனுதாருக்கு டென்டரை வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியின் கீழ், இலங்கை மின்சார சபையின் மூலம் முன்னெடுக்கப்படும் மின் வழங்குதலின் நம்பிக்கையை மேம்படுத்தும் ஒத்துழைப்பு கருத்திட்டத்தின் கீழ், தற்போது நாட்டின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைப் பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுவே ஜனாதிபதியினதும் தமது அமைச்சினதும் நோக்கம் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.





நயினா தீவு, நெடுந்தீவு, அனலை தீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களின் மின் தேவையை நிறைவேற்றுவதற்காக இத்திட்டத்தின் மூலம் 1,700 கிலோ வாட் மின்சாரத்தை காற்றைக் கொண்டும் 530 கிலோவாட் மின்சக்தியை சூரிய சக்தியைக் கொண்டும் உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட உள்ளது.





குறித்த தீவுகளில் வாழும் மக்களுக்கு இற்றைவரையும் அதிக செலவில் டீசல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கத் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.





இற்றை வரையும் பலவிதமான நிபந்தனைகளின் கீழ் உறுதியற்ற முறைமையின் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வடக்கிலுள்ள தீவுகளில் வாழும் ஏழை மக்களுக்கு, இத்திட்டம் பெரும் நிவாரணமாகவும் அமையும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.