வன்முறை வெடித்த சொலமன் தீவுகளில் படையை களமிறங்கியது ஆஸி.

banner

ந. பரமேஸ்வரன்





இரண்டாவது நாளாக அவுஸ்திரேலியா , சொலமன் தீவுகளுக்கு அமைதி காக்கும் படையை அனுப்பியுள்ளது.





இது குறித்து பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவிக்கையில்,





" 2017ஆம் ஆண்டு சொலமன் தீவுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. மேற்படி உடன்படிக்கை சொலமன் தீவுகளின் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலிய பொலிஸ், சொலமன் தீவுகளில் கடமையில் ஈடுபடுத்தப்படலாம் என கூறுகிறது.





அவுஸ்திரேலிய பொலிஸும் இராணுவமும் பசுபிக் தீவுகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் எனவும் மொறிசன் மேலும்
தெரிவித்துள்ளார்.





புதன்கிழமை பிரதமர் மனஸீஹ் சொகவாரேயை பதவியிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.





ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச கட்டிடங்களுக்குத் தீ
வைத்தனர்; இதனையடுத்து 36 மணித்தியால ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டங்களைத்தொடர்ந்து
பிரதமர் மனஸீஹ் சொகவாரே அவுஸ்திரேலியாவிடம் உதவி கோரியிருந்தார்.





ஆர்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அருகிலுள்ள மலைடா தீவிலுருந்து வந்திருந்தனர். வியாழக்கிழமை ஹொனியாரா சைனாடவுண் பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பிரதமர் சொகவாரே 2019ல் தாய்வானை புறந்தள்ளி சீனாவுடன்
இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையிலீடுபட்டனர்.





நாடு தனது பூரண கட்டுபாட்டிலிருப்பதாக பிரதமர் சொகவாரே தெரிவித்துள்ளார். தலைநகர் ஹொனியாரா வுக்கும்
மலைடாவுக்கும் இடையே 2003-17 காலப்பகுதியில் பிணக்குகள் ஏற்பட்ட போது அவுஸ்திரேலிய படைகள் நிறுத்தப்பட்டிருந்தன.