ஊடகர்மீது இராணுவம் தாக்குதல் - குவியும் கண்டனங்கள்

banner

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று, முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம்விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.





இது தொடர்பில் கிளிநொச்சி ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,





" சமீப காலமாக வடக்கு கிழக்கில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்மை அதிகரித்துள்ளது.





ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், தாக்குதல்கள் மேற்கொள்ளல், விசாரணைகளுக்கு அழைத்தல், அவர்களது உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் என ஊடகத்துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.





ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகத்துறை மீது மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான நிகழ்வுகள் நாட்டை மிக மோசமான நிலைமைக்கே கொண்டுசெல்லும். கருத்துச் சுதந்திரத்தை ஆயுதம் கொண்டு அடக்க முற்படும் நிலைமைகள் ஆரம்பிக்கப்படுவது கண்டனத்திற்குரியதோடு கவலைக்குரியதும்.





ஊடகவியலாளர்கள் தவறு விடுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு செல்வதனை விடுத்து அச்சுறுத்தி தாக்குதல்கள் மேற்கொள்வதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கிறது.





முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நாட்டின் ஊடக சுதந்திரத்தின் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். எனவே இதற்கான நீதி நிலைநாட்டப்படுவதோடு, ஊடகவிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது.