'ஆப்கான் பிரஜைகள் நாட்டைவிட்டு வெளியேற ஆஸி. ஒத்துழைக்க வேண்டும்'

banner

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கான் பிரஜைகளுக்கு எதாவது அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா உதவ வேண்டுமென அவுஸ்திரேலியா செனட் அறிக்கையொன்று கூறுகிறது.





அவுஸ்திரேலிய இராணுவத்துடனும் சிவில் நடவடிக்கைகளிலும் இணைந்து பணியாற்றிய ஆப்கான் பிரஜைகளின் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கை கூறுகிறது.





மொத்தமாக எட்டு சிபாரிசுகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.





வெள்ளிக்கிழமை பெடரல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஆப்கான் பிரஜைகளுக்கு குறைந்தது 15.000 மனிதாபிமான விசாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்த 272 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,





ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டுள்ளனர்; மற்றவர்கள் மறைவிடங்களில் வாழ்கின்றனர்.





அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்புடையவர்கள் அவுஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்களை அவுஸ்திரேலிய விமானங்களில் ஏற விடாமல் தடுப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





இவர்கள் இப்போதும் தலிபான்களிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் எவ்வளவு விரைவாக அவுஸ்திரேலியாவுக்கு வர முடியுமோ அவ்வளவு விரைவாக வருவதற்கு விசா நடைமுறைகளை துரிதப்படுத்தி உதவுமாறு அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.





எத்தனை பேர் அவுஸ்திரேலியாவுக்கு வர உள்ளனர் என்ற விபரம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. 5868 பேர் ஏற்கனவே வந்து விட்டனர் அவுஸ்திரேலிய பிரஜைகள், நிரந்தர விசா வைத்திருப்போர்,தற்காலிக விசா வைத்திருப்போர் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அவுஸ்திரேலிய அரசாங்கம் விசா வழங்கிய 2086 பேர் இன்னும் அவுஸ்திரேலியாவுக்கு வரவில்லையெனவும் அந்த அறிக்கை கூறுகிறது.





அவுஸ்திரேலிய அரசின் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள இராணுவ சட்டத்தரணி அவுஸ்திரேலிய திணைக்களங்கள் இன்னும் கூடுதலாக பணியாற்ற வேண்டுமென கூறியுள்ளார்; இவர் ஆப்கானிஸ்தானில் ஆப்கான் பிரஜைகளுடன் இணைந்து பணியில் ஈடுபட்டவர். எம்முடன் இணைந்து பணியாற்றியவர்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமை எனவும் தெரிவித்துள்ள இராணுவ சட்டத்தரணி பலர் விசா இல்லாமலும், விசா காலாவதியான நிலையிலும் வெளியேற வழியின்றி தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





அவுஸ்திரேலிய பிரஜைகள், நிரந்தர விசா, மற்றும் விசா வைத்திருப்போர், விசாவுக்கு விண்ணப்பித்தோர் போன்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொள்ள வே ண்டு மெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து குடும்ப விசா, நிரந்தர விசா, திறன்சார் தொழில் விசா போன்றவற்றை வழங்கி சிக்கலை எதிர்கொண்டுள்ள ஆப்கான் பிரஜைகள் வெளியேற வழி வகுக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.