'போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்திய குடியுரிமை' - இலங்கை பெண் குறித்து தீவிர விசாரணை

banner

போலி கடவுச்சீட்டு வழக்கில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்தது தெரியவந்ததையடுத்து, அவர் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகவர் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.





இதன்படி என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளவரின் பெயர் மேரி பிரான்சிஸ்கா. இலங்கையைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றார்.





அப்போது அவரது கடவுச்சீட்டை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்றும், அதற்கான இந்திய அரசின் கடவுச்சீட்டை கொண்டு வந்ததும் தெரியவந்தது.





இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் மேரி பிரான்சிஸ்காவை க்யூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியன.





விசாரணையில் மேரி பிரான்சிஸ்கா கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலமாக சென்னை வந்துள்ளார். அண்ணாநகரில் குத்தகைக்கு வீடு ஒன்று எடுத்து தங்கியுள்ளார்.





வீடு குத்தகைக்கு எடுத்த ஆதாரங்களை வைத்து தங்களது வீடு என்று கூறி இலங்கை குடியுரிமையை மறைத்து இந்தியர் என்று ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதை வைத்து இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்று பாஸ்போர்ட் எடுத்து மோசடி செய்துள்ளார். இதையடுத்து போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னையில் தங்கி வந்த மேரியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைடுத்து மேரியிடம் டெல்லி தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.





இதன்படி மேரி, தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தோடு தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இவர் மும்பை, பெங்களூர், சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்துள்ளார். போலி கடவுச்சீட்டு மூலமாக வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலமாக பயணித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.





விடுதலை புலி இயக்கத்திற்காக நிதி திரட்டும் பணியில் மேரி முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும், பல ஆண்டுகளாக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் போலி ஆவணங்கள் மூலமாக மும்பையிலுள்ள வங்கியிலிருந்து பணத்தை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.





மேரிக்கு உதவியாக கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், செல்லமுத்து ஆகியோர் செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நால்வரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.