காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி 14 வருடங்களாக போராடிய தாய் மரணம்! பேரவலம் தொடர்கிறது!!

Sri Lanka 1 வருடம் முன்

banner

" சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன்" என உறுதியாக இருந்த தங்கராசா செல்வராணி, அதே நிலைப்பாட்டில் நேற்று இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளார்.





வவுனியாவைச் சேர்ந்த இவர், காணாமல்போன தனது மகன், பேரன் மற்றும் மருமகன் ஆகியோரை கடந்த 14 வருடங்களாக இவர் தேடிவந்தார். பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.





75 வயதான குறித்த தாய், மன உளைச்சலால் ஏற்பட்ட உடல்நல குறைவால் , அண்மையில் காலமானார். இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றன.





இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அதன் பாதிப்புகள் இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றன.





யுத்த காலப் பகுதியில் காணாமல் போன உறவுகளை தேடி, இன்றும் இலங்கையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.





குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணாமல் போனோரை தேடும் தேடல், இன்றும் தொடர்கின்றது.





வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்றும் தமது உறவுகளை தேடி போராடி வருகின்றநிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட பலர், போராட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.





வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், உடலில் வலுவின்மை போன்ற காரணங்களில் பெற்றோர் போராட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.





இதுவரையில் 10 மேற்பட்ட தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.