கல்வி அமைச்சராகிக் கவனத்தை ஈர்த்த கறுப்பின வரலாற்றாசிரியர்!

World 1 வருடம் முன்

banner

பிரான்ஸில் குடியேற்றம் மற்றும் காலனி ஆதிக்கம் தொடர்பான வரலாற்றாசிரியர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye)
கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.





ஆபிரிக்க வம்சாவளியில் செனகல் நாட்டைச் சேர்ந்தவரான 56 வயதுடைய அவரது நியமனம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.





செனகல் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும்பிரெஞ்சுத் தாய்க்கும் மகனாகப் பிறந்த வர் பேயாப்பே என்டியாய். சர்வதேச அளவில் அறியப்படுகின்ற ஒரு வரலாற்று ஆய்வாளரான அவர், ஐக்கிய அமெரிக்காவையும் அங்குள்ள சிறுபான்மையினர்களதும் சமூக வரலாற்றையும் ஆய்வுசெய்ததில் நிபுணத்துவம் பெற்றவர்.பாரிஸின் புகழ்பெற்ற "சயன்சஸ் போ"
(Sciences Po) பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.பாரிஸில் உள்ள வரலாறு மற்றும் குடியேற்றம் தொடர்பான அருங்காட்சியகத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்தவர்.





அதிபர் மக்ரோன் அரசியலுக்கு வெளியே உள்ள துறைசார் புலமையும் திறமையும் வாய்ந்த பிரபலமானவர்களைஅமைச்சரவைக்குள் உள்வாங்குகின்ற கொள்கையைக் கொண்டுள்ளார். கடந்த தவணைக் காலத்தில் அவ்வாறு அரசியல் அனுபவம் ஏதுமற்ற பிரபல சட்டத்தரணி எரிக்-டுப்பொன்ட் மொரெட்டியை (Eric-Dupond Moretti) பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதி அமைச்சராக நியமித்தார்.





அதேபோன்று தான் இந்தத் தடவை சிறுபான்மைக் கறுப்பினத்தவரான பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) அவர்களை கல்வி அமைச்சுக்குப் பொறுப்பாக்கியிருக்கிறார். அவரது நியமனத்துக்குத் தீவிர வலதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். அதேசமயம் பிரபல ஆசிரிய தொழிற்சங்கங்கள் அவரை வரவேற்றுள்ளன.





முன்னாள் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer அவர்களது பணிக்காலத்தில் கடந்த ஆண்டு நாட்டின் ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே சிக்கலான உறவு நிலை காணப்பட்டது. அதனைச் சீர்செய்யவேண்டிய பெரும் பொறுப்பு புதியவரான பேயாப்பே என்டியாய் மீது சுமத்தப்பட்டுள்ளது.





-பாரிஸிலிருந்து குமாரதாஸன் -