தற்போதைய கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஒருகாலத்தில் “பெல்ஜியம் கொங்கோ” என்று அழைக்கப்பட்டது.
பெல்ஜியம் நாட்டின் காலனித்துவத்தின் கீழ் மிக நீண்ட காலம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு அது. கொங்கோவின் சுதந்திரத் தலைவராக மதிக்கப்பட்டவர் அதன் முதல் பிரதமர் பற்றிஸ் லுமும்பா.
(Patrice Lumumba). ஆபிரிக்காவில் மேற்குலகின் காலனி ஆதிக்கத்தைக் கடுமையாக எதிர்த்துவந்த ஒர் இளம்தலைவர் அவர்.
பெல்ஜியம் நாட்டின் பிடியிலிருந்து கொங்கோ சுதந்திரம் பெற்ற பிறகு அதன் முதலாவது இளம் பிரதமராகத் தெரிவாகிய லுமும்பா, கொங்கோ மக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட நிலையில் 1961 இல் அவரது 35 ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார்.
பெல்ஜியம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை எதிர்த்துவந்த காரணத்தால் அவரும் வேறு இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களும் பெல்ஜியம் நாட்டின் கூலிப் படைகளால் கடத்தப்பட்டுக் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டனர் என்று
கூறப்படுகிறது.அவர்களது உடல்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சுட்டுக்கொல்லப்பட்டபிறகு லுமும்பாவின் உடல் எவரிடமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக துண்டுகளாக வெட்டப்பட்டு அமிலத் திரவம் கொண்டு கரைத்து அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறு அவரது உடல் அழிக்கப்பட்ட போது அந்தச் செயலைப் புரிந்த கொலைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவரான பெல்ஜியம் நாட்டின் பொலீஸ் ஆணையாளர் ஒருவர், லுமும்பாவின் தங்கப் பல் ஒன்றைக் களவாக எடுத்துத் தன்னோடு மறைத்து வைத்துக் கொண்டார் என்ற தகவல் பின்னர் தெரிய வந்தது. அந்தப் பல்லை அங்கிருந்து பெல்ஜியத்துக்கு எடுத்துவந்த அந்த அதிகாரி நீண்ட காலம் அதனை மறைத்து வைத்துப் பேணி வந்துள்ளார்.
இந்தத் தகவல் லுமும்பாவின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததை அடுத்து அவர்கள்அதனைத் திருப்பித் தருமாறு கேட்டு பெல்ஜியம் நாட்டின் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடக்கினர். அதன் காரணமாக 2016 ஆம் ஆண்டு லுமும்பாவின் பல் அந்தப் பொலீஸ் அதிகாரியின் மகளிடம் இருந்து பெல்ஜியம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
லுமும்பாவின் பிள்ளைகளது கோரிக்கையின் பேரில் பெல்ஜியம் அரசு அவரது பல்லை ஒரு பேழையில் வைத்து உரிய மரியாதையுடன் இந்த வாரம் கையளித்துள்ளது. கொல்லப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள
அவரது எச்சம் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய தின நிகழ்வின் போது அது அந்த மண்ணில் விதைக்கப்படவுள்ளது.
பற்றிஸ் லுமும்பா விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலம் கசப்புணர்வு நீடித்து வந்தது. அவரது படுகொலை தொடர்பான விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டு அவருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று குடும்பத்தினர் கோரிவந்தனர்.லுமும்பா படுகொலையில் தனக்கு முழுப் பங்கு இருப்பதை பெல்ஜியம் தொடர்ந்து மறுத்தே வந்தது. எனினும் கொங்கோவில் காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த அநீதிகளுக்காக பெல்ஜியம்
அரசின் மன்னிப்புக் கோரலை அந்த நாட்டின் பிரதமர் இப்போது பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார்.
ஆபிரிக்கக் காலனித்துவங்களுக்கு எதிரான ஒரு சக்தி மிக்க விடுதலை வீரனை வரலாற்றின் நினைவுகளில் கூட விட்டுவைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்றைய அமெரிக்கா தலைமயிலான அணி லுமும்பாவின் உடலை அணு அளவு எச்சம் கூட விடாமல் அழித்துவிட முடிவெடுத்தது என்று பனிப் போர்க் காலக் கொடுமைகளை ஆய்வுசெய்கின்ற நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். ஆயினும் பல தசாப்தங்கள் கடந்த பிறகும் பற்றிஸ் லுமும்பா இன்றைக்கும் உலகில் ஒடுக்கப்படுகின்ற மக்கள் மத்தியில் ஒரு மாவீரனாக நினைவு கூரப்பட்டுவருகிறார்.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்