வடக்கு மாகாணத்தில் ஒலிபெருக்கிகளின் அளவுகடந்த ஒலியினால், அதிர்வுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
நகர்புறங்களை விட ஊர்களில், கிராமங்களில் ஒலிபெருக்கி மற்றும் மிகசக்கிவாய்ந்த ஒலிப்பெட்டிகளின் சத்தத்தினால் பொதுமக்கள் பாதிப்புள்ளாகின்றனர். இவ்வாறான ஒலிபெருக்கிகள், ஒலிப்பெட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளதுடன் அதனால் ஏற்படும் துன்பமும் அதிகரித்துள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த எவரும் முன்வருவதில்லை.
பொதுவாக மனிதனின் கேட்கும் ஒலியின் சத்த வரம்பு 0 dB முதல் 140 dB வரையாகும். 0 dB என்பது மனித செவிப்புலன் வரம்பு, அதே சமயம்
120-140 dB(டெசிபல்) என்பது காதுக்கு வலியை ஏற்படுத்தும் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்கும் அளவாகும். ஒரு நாளைக்கு, 85 டெசிபல்களுக்கு மேல் 8 மணிநேரத்திற்கு மேல் சத்தத்தின் வெளிப்பாடு செவிப்புலன் பாதிப்பு அல்லது இழப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறான நிலையை யாழ்மாவட்ட புறநகர்பகுதி ஊர்களில் வாழும் மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர்.
ஒலிபெருக்கி சாதனங்களை வாடகைக்குவிடும் உரிமையாளர்களின் விளம்பரங்களில் எழுப்பப்படும் ஒலிகள் போர்காலங்களில் ஒலித்த குண்டு சத்தங்கள், துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள், போர் விமானச்சத்தங்களை ஒத்ததாக இருப்பதுடன் அவற்றைவிட வலிமையான உடல் நலத்துக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை உடையதாகவுள்ளது.
எனவே கட்டுப்பாடற்ற வகையில் கொடூரமாக ஒலிபெருக்கிசாதனங்களை ஒலிக்கவிடும் உரிமையாளர்களை பதிவு செய்வதுடன் அதனை பயன்படுத்துவது தொடர்பில் உரிய ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படல் வேண்டும், அதிக ஒலி எழுப்பி, அதிர்வுகளை ஏற்படுத்தி பொதுமக்களை துன்பப்படுத்தும் செயல்களை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகள் உரிய தரப்புக்களால் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.