மருதமடு அன்னையின் ஆடி பெருவிழாவுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இம்முறை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதொடர்பாக மடு பரிபாலகர் கேட்போர் கூட்டத்தில் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடுபரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆடிமாத பெருவிழாவுக்கு குறைந்தது இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விழாவை முன்னிட்டு ஏற்கனவே மடுத்திருத்தலத்தில் காணப்படும் 350 வீடுகளும் பக்தர்களால் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்பொழுது விழாவுக்கான கொடியேற்ற நாளிலிருந்து இதுவரைக்கும் 300ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளதுடன் தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். வருகை தருபவர்களுக்கு உணவுகள் கிடைக்கக்கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய வசதிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
ஆலயப் பகுதிக்குள் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மடு பரிபாலகர் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.
மடு ஆலயப்பகுதிக்குள் ஒழுக்க சீர்கேடுகள் நடைபெறாதிக்கும் முகமாக பலத்த பாதுகாப்புக்கள் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
நுளம்புத் தொல்லைகளை தடுக்க சுகாதார சேவை திணைக்களத்தால் மருந்து விசிறிகள் தெளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான எரிபொருள் மடு பிரதேச செயலாளர் ஊடாக அரச அதிபரால் வழங்கப்பட்டு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.