டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு - மூவர் பலி! 22 வயது இளைஞன் கைது!!

banner

டென்மார்க் தலைநகரில் வணிக வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டவர் 22 வயதான டெனிஷ் வாலிபன் என்று பொலிஸ் தலைமை அதிகாரி செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.





தாக்குதலின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியாத போதிலும் அது ஒரு பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.





வணிக வளாகத்தில் சூட்டுக்கு இலக்காகியோரில் மூவர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த வேறு மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.





இத்தகவலை நகர பொலீஸ் அதிகாரி நள்ளிரவு தாண்டி இன்று அதிகாலை நடத்திய இரண்டாவது செய்தியாளர் சந்திப்பிலேயே வெளியிட்டார்.





தாக்குதலாளி தனித்தே செயற்பட்டு ள்ளார் என்று நம்பப்பட்டாலும் அவரோடு தொடர்புடைய வேறு நபர்கள் எவராவது உள்ளனரா என்ற சந்தேகத்தில் தலைநகரிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பொலீஸார் நேற்று இரவிரவாகத்





தேடுதல்களை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்துக்கு அண்மையில் உள்ள றோயல் அரேனா (Royal Arena) அரங்கத்தில் நேற்றிரவு நடைபெறவிருந்த பிரபல ஆங்கிலப் பாடகர் ஹரி ஸ்ரைல்ஸின் (Harry Styles) இன்னிசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.





தாக்குதல் நடத்திய இளைஞனின் வீடியோக்கள் எனக் கூறப்படுகின்ற நான்கு யூரியூப் பதிவுகளைப் பொலீஸார் கூர்ந்து பரிசோதித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.





அவற்றில் ஒன்றில் துப்பாக்கி சகிதம் தோன்றும் அவ்விளைஞர் Quetiapine எனப்படும் மருந்து மாத்திரை தொடர்பாகக் கருத்துப் பதிவு செய்துள்ளார். குழந்தைகள் மற்றும் ரீன்-ஏஜ் பருவத்தினரது மனச்சோர்வுக் கோளாறுகள் மற்றும் மூளையின் இரு முனைச் செயற்பாடுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு இந்த வகை மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த இளைஞர் தனது வீடியோ ஒன்றில் மாத்திரையின் பெயரைக் குறிப்பிட்டு அதனால்"பலன் எதுவும் இல்லை" ("Quetiapine does not work") என்று கூறியுள்ளார். அந்த வீடியோப் பதிவு புலன் விசாரணையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.





இதேவேளை - மிகவும் துயரம் தோய்ந்த இந்த வேளையில் டெனிஷ் மக்கள் அனைவரும் ஐக்கியமாய் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று பிரதமர் மெற் ஃபிரெடெரிக்ஸன் அம்மையார் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதனை
"டென்மார்க் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஒரு தாக்குதல்" என்று வர்ணித்துள்ள அவர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் உறவினர்களுக்குத் தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.





04-07-2022 தாஸ்நியூஸ் - பாரிஸ்.