லண்டன், பாரிஸ் நகரங்களை வறுத்தெடுக்கும் வெப்ப அனல் - விமான சேவைகள் இடைநிறுத்தம்!

banner

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உருவாகியுள்ள மோசமான வெப்ப அனர்த்தம் இயல்பு வாழ்வைப் பாதித்திருக்கிறது. லண்டன், பாரிஸ் நகர வாசிகளை இன்று வெப்பமவறுத்தெடுத்திருக்கிறது. ரயில், விமான போக்குவரத்துகளையும் அது வெகுவாகப் பாதித்துள்ளது.





இங்கிலாந்தின் லூட்டன் விமானநிலையத்தின்(Luton Airport) ஓடு பாதையை வெப்பம் உருகச் செய்ததால் அங்கு இன்று விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.





ஓடு பாதையின் தரை மேற்பரப்புபாதிக்கப்பட்டதால் (surface defect) சேவைகள் இடை நிறுத்தப்படுவதாகவிமான நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது. திருத்த வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





அது முடிவடைந்ததும் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லூட்டனில் வெப்பம் 36C என்ற அளவைக் கடந்துள்ளது. EasyJet, Wizz Air, Ryanair போன்ற விமான சேவை நிறுவனங்கள் லூட்டன் விமானநிலையத்தைப் பயன்படுத்துகின்றன.





அதேசமயம், பிரைஸ் நோர்ட்டனில் (Brize Norton) அமைந்துள்ள பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் மிகப் பெரிய விமானத் தளமும் வெப்ப அனலினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அங்கு விமானங்கள் இறங்குவதும் ஏறுவதும் தடைப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





அதி உச்ச வெப்ப நாள் என்று கணிக்கப்பட்ட இன்றைய (திங்கள்) நாளில் இங்கிலாந்தின் சில இடங்களில் வெப்பநிலை 38.1C அளவாகப் பதிவாகியுள்ளது. அது 42 C வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் அடங்கலாகப் பல பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. நாளைய தினமும் ஆகக் கூடிய வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.





பாரிஸின் சில ரயில் சேவைகள் கடும் வெப்பம் காரணமாகத் தாமதமடைந்துள்ளன. நகரில் குழந்தைகள் பராமரிப்பகங்களைநேரகாலத்துடன் மூடுமாறு நகர நிர்வாகம் பணித்திருக்கிறது.





கோடை விடுமுறை கழிப்பதற்காகப் பாரிஸ் நகருக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வெப்பத்தில் தவிப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது.





பிரான்ஸின் தென் மேற்கு மாவட்டங்களை வெப்பம் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அங்கு 15 மாவட்டங்களில் மக்கள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். 69 மாவட்டங்களுக்குச் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு காடுகளில் மூண்ட தீ ஐந்து நாட்களுக்கு மேலாகக் கட்டுக்கடங்காமல் பரவி 15 ஆயிரம் ஹெக்டேயர்வனப் பிரதேசத்தை அழித்துவிட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுத் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தென்மேற்குப் பகுதி நிலைவரத்தைஊடகங்கள் வெப்பப் பேரழிவு('heat apocalypse') என்று வர்ணிக்கின்றன.





பிரான்ஸில் ஆகக் கூடிய வெப்பம் 39.3°C Nantes மாவட்டத்தில் இன்று பதிவாகியுள்ளது.
ஸ்பெயின், போர்த்துக்கல், கிறீஸ் நாடுகளிலும் வெப்ப அனல் காற்று காட்டுத் தீக்களை உருவாக்கி உள்ளது. உல்லாசப் பயணிகள் தங்கியுள்ள பல முக்கிய இடங்களைதீ நெருங்கியுள்ளது. அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்கு ஐரோப்பாவை வதைக்கும் இந்த வெப்ப அனல் பூமி வெப்பமடைவதால் ஏற்படுகின்ற பருவநிலை மாறுதல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டதுஎன்று நிபுணர்கள் கூறுகின்றனர்.





தாஸ்நியூஸ் - பாரிஸ்.