பிரான்ஸின் வரலாற்றிலே நேரிட்ட பெரும் காட்டுத் தீ!

World 1 வருடம் முன்

banner

பிரான்ஸின் தென் மேற்குப் பகுதியில் கடந்த சில நாட்களாகப்பெரும் காட்டுத் தீ பரவிய பிரதேசத்துக்கு நேரில் விஜயம் செய்த அதிபர் மக்ரோன், தீயை அணைப்பதற்காக இரவுபகலாகப்
போராடிய தீயணைப்பு வீரர்களை நாட்டின் "நாயகர்கள்" என்று புகழந்திருக்கிறார்.





La Teste-de-Buch என்ற இடத்தில் தீயணைப்புப் படையினரின் மத்திய நிலையத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் Arcachon basin வட்டகையில் பரவிய காட்டுத் தீயை வரலாற்றில் ஏற்பட்ட பெரும் தீ அனர்த்தம் என்று விவரித்தார். Gironde மாவட்டத்தில்
சுமார் 20 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவிலான காட்டைத் தீ முழுமையாகத் தின்றுவிட்டது. 37 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.





பெரும் வனப்பிரதேசத்தின் இழப்பை ஈடுசெய்வதற்காகத் தேசிய திட்டம் ஒன்றின் கீழ் மரங்கள் மீள நடப்படும் என்று மக்ரோன் அங்கு அறிவித்தார்.





மிக உச்ச அளவுகளைத் தொட்ட அனல் வெப்பத்தின் காரணமாக பெரும் தீ பரவிய சமயத்தில் நாடு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான போதிய தீயணைப்பு வளங்களைக் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வி பல தரப்புகளிலும் எழுந்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்வது போன்று, காட்டுத் தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற நீர்த்தாரை





விமானங்களின் (Canadairs) எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என்றும் மக்ரோன் அங்குஅறிவித்திருக்கிறார்.





காட்டுத் தீ பரவிய இடங்களில் இன்று லேசாக மழை பொழிந்துள்ளது அதனால் தீயின் அசுர வேகம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. காட்டுப் பகுதியில் தீ தற்செயலாக பரவியதா அல்லது வேண்டும் என்றே மூட்டப்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள்நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.





நாட்டின் தென்மேற்கில் பரவிய தீ காரணமாக எழுந்த புகை மூட்டம் நூற்றுக் கணக்கான மைல்கள் தாண்டிப் பாரிஸ் பிராந்தியத்தின் மீதும் லேசாகக் கவிந்துள்ளது.





தாஸ்நியூஸ் - பாரிஸ்.