வரலாறுகாணாத வெப்பம் - ஐரோப்பிய நதிகள் வற்றுகின்றன!

World 1 வருடம் முன்

banner

அரசியல், யுத்தங்கள் தாண்டி சூழலும் பருவநிலையும் செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. ஐரோப்பாவில்





ஏற்பட்டிருக்கும் கடும் வரட்சியும் காட்டுத் தீயும் மனித குலத்துக்குப் பல புதிய எச்சரிக்கைகளைச் சொல்வதுபோலப்படுகிறது. நதிகள் இதுவரை காணாத மட்டங்களுக்கு வற்றி வருகின்றன. லண்டன் தேம்ஸ் நதியின் ஊற்றிடம் நிரந்தரமாக வரண்டு கிடப்பதாக வெளியான பிந்திய தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன.





லண்டனை ஊடறுத்துச் செல்லும் தேம்ஸ் நதியின் தொடக்க இடம் அல்லது ஊற்றிடம் என்று கருதப்படும் குளோசெஸ்டர்ஷெயர் (Gloucestershire) பகுதி மிக மோசமாக வரண்டு தரிசு நிலமாகக் காட்சியளிக்கிறது. பொதுவாகக் கோடை காலத்தில் நீர் வற்றுவது வழக்கம் என்றாலும் இந்தத் தடவை அது நீர் இருந்ததற்கான எந்தவித அடையாளங்களும் இன்றி வரண்டு ஆபிரிக்காவின் சவன்னா(Savanna grassland) போலக் கிடப்பது பருவநிலை மாறுதலின் ஒரு துர்க்குறி என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





இங்கிலாந்தின் இரண்டாவது நீண்ட நதியாகிய தேம்ஸ் 215 மைல்கள் நீளமுடையது. தெற்கு இங்கிலாந்தில் லண்டனை ஊடறுத்து வட கடலில் சென்று முடிவடைகிறது. அது தரையில் தொடங்கும் இடம் அல்லது அதன் பாரம்பரிய ஊற்றுக்கண் எழுகின்ற பகுதி, வேல்ஸ் அருகே குளோசெஸ்டர்ஷெயர் (Gloucestershire) பிரிவில் கோட்ஸ்வோல்ட்ஸ்(Cotswolds) என்ற இடத்தில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள சுண்ணாம்புக் கற்பாறை நிலத்தில் இருந்தே தேம்ஸ் ஊற்றெடுத்துப் பாய்கிறது. மழை மற்றும் பனிக் காலங்களை அடுத்தே அங்கு அந்தப் பருவ கால ஊற்றுக்களில் (spring water) ஆற்று நீர் வெளிப்படுகிறது. ஆனால் தற்சமயம் அந்த ஊற்றுப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து மைல்கள் நீளமான நதியின் தொடக்கப் பகுதி வரண்டு காட்சியளிக்கிறது. அது வழமைக்கு மாறானது என்று லண்டன் நதி நம்பிக்கை நிதியத்தின் (Rivers Trust) பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.





கோடையில் குறுகிய காலத்துக்கு மட்டுமே அங்கு நீர் குறைந்து காணப்படுவது வழக்கம் என்றாலும் இப்போது நிலம் முழுவதுமாக வரண்டு- நீர்த்தன்மை இழந்து- நீர்வாழ் உயிரினங்களது தடயம் எதுவும் இன்றிய தரிசு நிலம் போலக் காட்சியளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அண்மைக் காலங்களில் மழை மற்றும் பனி வீழ்ச்சி குறைந்தமையும், கடந்த சில வாரங்களாக நீடிக்கின்ற கடும் வெப்பமுமே நதி நீரை அடியோடு வற்றச் செய்துள்ளன என்றும் அதன் ஊற்றிடத்துக்கு அப்பால் நதி செல்லும் வழி எங்கும் நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





இங்கிலாந்தைப் பொறுத்தவரை அதன் கோடைகால வெப்ப வரலாற்றில் 1934 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதமே மிக மோசமான அதிக வெப்பநிலை பதிவாகியிருக்கிறது என்று தரவுகள் வெளியாகியுள்ளன.





லண்டன் நகரம் உட்பட பல பகுதிகளிலும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.





ThasNews-Paris