எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

banner

காடுகள் இன்னமும் பல்லுயிரிகளின் தாயகமாக விளங்குகின்றன. மனித செயல்களால் காடுகள் நாசமாகின்ற போது பல்வேறு உயிர் ஜந்துகளும் சொல்லெணாத் துயரங்களை அனுபவிக்க நேர்கின்றது.





பிரான்ஸின் பல இடங்களில் வெப்ப மிகுதியால் காடுகள் தொடர்ந்தும் எரிந்துகொண்டிருக்கின்றன. தீயை அணைப்பதற்காக இரவுபகலாக நெருப்புடன் போர் தொடர்கிறது.





வெந்து தணிந்த காடுகளில் இருந்து தாகத்துடன பசியுடனும் தப்பி ஓடி வந்த சிறு விலங்குகளை பல் வேறு அமைப்புகளின் தொண்டர்கள் மீட்டெடுத்துப் பராமரித்து வருகின்றனர். பல்லாயிரக் கணக்கான பறவைகளும் விலங்குகளும் தீயோடு அழிந்துவிட்டன. கடந்த மாத இறுதியில் காட்டுத் தீயில் இருந்து தப்பி ஓடி வந்த மான் ஒன்று கடற்கரையை நோக்கி வந்து கரையில் வீழ்ந்து இறந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகிக்
காண்போரின் மனதுருகச் செய்திருந்தது
எரியும் காடுகளில் இருந்து சில விலங்குகள் தப்பியோடி மீட்புப் பணியாளர்களிடம் அடைக்கலம் தேடிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.





"விலங்குகள் தன்னிச்சையாகவே நம்மை நோக்கி ஓடி வருவதைக் கண்டோம். அவை பசி தாகத்துடன் எங்களை நெருங்குவது மிகவும் அசாதாரணமான காட்சியாக இருந்து" - என்று தீயணைப்பு வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





பிரான்ஸில் ஏழாயிரம் ஹெக்டேயர் பரப்பில் - சுமார் 14 ஆயிரம் உயிரினங்களது- முக்கிய பல்லுயிர் மையமாக (great biodiversity) விளங்கிய Teste-de-Buch என்னும் இடத்தில் உள்ள காட்டை தீ விழுங்கியுள்ளது. அங்கு மிகச் சொற்ப எண்ணிக்கையான உயிரினங்களே தப்பிப் பிழைத்துள்ளன.





மனித நடவடிக்கைகள் பருவநிலை யில் ஏற்படுத்தும் தாக்கம் பூமியைத் தாயகமாகக் கொண்ட எல்லா உயிரினங்களினதும் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தி உள்ளது.





தென்மேற்கு போர்தோ மாகாணத்தில் Gironde என்ற இடத்தில் கடந்த வியாழனன்று பரவிய தீ இரண்டு தினங்கள் மூர்க்கமாக எரிந்து சுமார் 7,400 ஹெக்டேர் பரப்பளவில் வன வளங்களை அழித்துள்ளது.





ஜேர்மனி, ருமேனியா, கிறீஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 தீயணைப்பு வீரர்கள் பிரான்ஸின் வீரர்களோடு கைகோர்த்துத் தீயணைப்புப் பணிக்கு உதவியுள்ளனர்.





தாஸ்நியூஸ் - பாரிஸ்.