13 இடங்களில் கத்திக்குத்து - 10 பேர் பலி! கனடாவில் பயங்கரம்!!

World 1 வருடம் முன்

banner

கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.





13 இடங்களில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5:40 மணிக்கு (1140 GMT) மணிக்கு முதல் கத்திக் குத்து சம்பவம் பதிவானது. பின்னர் தொடர்ந்து 13 இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிஸார் 10 பேரை சடலங்களாக மீட்டனர்.





ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனின் (James Smith Cree Nation) பழங்குடி சமூகம் மற்றும் சஸ்காட்சுவான் மாகாணத்தில் அருகிலுள்ள வெல்டன் நகரத்தில் 10 பேர் இறந்து கிடந்தனர் என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.





காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும். சிறிய காயங்களுக்கு உள்ளான மேலும் சிலர் தாங்களாகவே மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கலாம் என்று அவர் கூறினார்.





இது பயங்கரமான மற்றும் இதயத்தை நொருக்கும் தாக்குதல் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.





இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என தெரிவித்து, அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.





சுமார் 30 வயதை நெருங்கும் இவர்கள் இருவரும் கடைசியாக கறுப்பு நிற நிசான் ரோக் காரில் பயணித்ததாகவும், தாக்குதல்கள் நடந்த இடத்திலிருந்து தெற்கே 320 கி.மீ. தொலைவில் உள்ள சஸ்காட்சுவான் மாகாண தலைநகரான ரெஜினாவில் கடைசியாக காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





இந்த நபர்கள் மேலும் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபாவிலும் இவ்வாறான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. பின்னர் சஸ்காட்சுவான் மாகாணம் முழுவதும் இந்த எச்சரிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.





தாக்குதல்களை அடுத்து 2,500 மக்கள் தொகை கொண்ட ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பழங்குடி தலைவர்கள் உள்ளூர் அவசர கால நிலையை அறிவித்துள்ளனர்.