ராணி இறந்த செய்தி தேனீக்களுக்கும் தெரிவிப்பு!

World 1 வருடம் முன்

banner
எலிசபெத் மகாராணியின் மறைவுச் செய்தி பக்கிங்காம் அரண்மனைத் தோட்டத்தில் பெட்டிகளில் வளர்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான தேனீக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அரசராக சார்ள்ஸ் பதவியேற்ற தகவலும் தேனீக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

நூற்றாண்டுகளாகத் தொடருகின்ற இந்தப் பாரம்பரியம் ஒரு மூடநம்பிக்கை போலத் தோன்றினாலும் அது இன்றைக்கும் அரச குடும்பத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு வழக்கமாக உள்ளது. அரச தோட்டத்துத் தலைமைத் தேனீப் பராமரிப்பாளரான 79 வயதான ஜோன் சப்பல்(John Chapple) என்பவர் மகாராணி இறந்த செய்தியைப் பெட்டிகளில் தட்டி மெதுவான குரலில் தேனீக்களிடம் தெரிவித்ததுடன் பெட்டிகளில் துயரத்தின் அடையாளமாகக் கறுப்புப் பட்டிகளைக் கட்டினார் என்ற தகவலை லண்டன் 'டெய்லி மெயில்' பிரத்தியேகமாக வெளியிட்டிருக்கிறது.

அரச குடும்பத்தில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதனைத் தேனீக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற பாரம்பரியம் நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. தேனீக்கள் தேனை உற்பத்தி செய்வதாக மூடத்தனமாக நம்பப்பட்ட காலத்தில் இருந்தே இந்த வழக்கம் ஆரம்பித்தது என்றும் கூறப்படுகிறது. மரணச் செய்தியைத் தேனீக்களுக்குக் கூறாவிட்டால் அவை தேனை உற்பத்தி செய்யாமல் கூட்டை விட்டு வெளியேறிவிடலாம் அல்லது இறந்து போகலாம் என்ற மூட நம்பிக்கை இந்தப் பாரப்பரியத்தின் பின்னால் இருந்திருக்கிறது. அது இன்னமும் அப்படியே பின்பற்றப்பட்டும் வருகிறது.

இதேவேளை, மகாராணியின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbe) நடைபெறும் என்பதை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

அன்றைய நாள் பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உட்பட உலகெங்கும் இருந்து தலைவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளனர். பாரிஸ் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இறுதி நிகழ்வுக்காக உலகின் முக்கிய தலைவர்களும் மில்லியன் கணக்கான மக்களும் ஒரே சமயத்தில் லண்டனில் திரளவுள்ளதால் பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்வதில் அதிகாரிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.

மகாராணி எலிசபெத்தின் உடல் இன்னமும் அவர் உயிர் பிரிந்த பால்மோரல் தோட்ட மாளிகையிலேயே வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையே உடல் லண்டனுக்கு எடுத்துவரப்படும். இறுதி நாள் நிகழ்வுக்கு முன்பாக நான்கு தினங்கள் அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும். அத்துடன் லண்டன் வீதிகளிலும் உடல் பவனி இடம்பெறவுள்ளது.

தாஸ்நியூஸ் - பாரிஸ்.