முதியவரை தாக்கி கொன்ற கங்காரு - 8 தசாப்தங்களுக்கு பிறகு ஆஸி.யில் அதிர்ச்சி சம்பவம்!

Australia 1 வருடம் முன்

banner
ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு, முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரெட்மண்ட் நகரில் 77 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த முதியவர் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார்.

இது குறித்து உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், அந்த நபரை அணுக விடாமல் கங்காரு ஒன்று தடுத்துள்ளது.

தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டது. கங்காருவை அந்த நபர் செல்லபிராணியாக வளர்த்து வந்ததும், தற்போது அந்த நபர் கங்காருவால் தாக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 5 கோடி கங்காருகள் உள்ளன. அவை 90 கிலோ வரை எடையும் 2 மீட்டர் உயரமும் வளரும். இவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன. இதற்கு முன்னர் 1936 ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்ற வில்லியம் என்ற நபர் அந்த விலங்கால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் 86 ஆண்டுகள் கழித்து கங்காரு தாக்கி முதியவர் மரணமடைந்து இருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நகரமயமாகி வருவதால், வனப்பகுதியில் அழிக்கப்பட்டு, கங்காரு வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்ற விமர்சனம் எழுந்துள்ளது.