மர்ம ட்ரோன்கள் பறந்ததால் அச்சம்! நோர்வேயில் எரிசக்தி மையங்களுக்கு பாதுகாப்பு!!

banner
நோர்வே நாட்டின் மின் மற்றும் எரிபொருள் மையங்கள் மீது மர்மமான முறையில் சில ட்ரோன்கள் பறந்துள்ளன என்று அந்நாட்டின் நீர் மற்றும் எரிசக்தி இயக்குநரகம் (Water and Energy Directorate - NVE) தெரிவித்திருக்கிறது. அதனையடுத்து டென்மார்க் ஊடாக போலந்துக்கு எரிவாயுவை விநியோகிப்பதற்காக அண்மையில் நிறுவப்பட்ட கடலடிக் குழாய்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகடலில் உள்ள நோர்வேயின் இயற்கை எரிவாயு வயல்களில் இருந்து எரிவாயுவை போலந்துக்கு விநியோகிப்பதற்காக நிறுவப்பட்ட குழாய் இணைப்பு டென்மார்க்கின் ஜூலான்ட் (Jutland) ஃபுனென் (Funen) ஷீலான்ட் (Zealand) வழியாக பால்டிக் கடலுக்குள் சென்று பின்னர் போலந்து நாட்டை அடைகின்றது. நோட் ஸ்ட்ரீம் குழாய்கள் தகர்க்கப்பட்டிருப்பதை அடுத்து நோர்வே அதிகாரிகள் தங்கள் பால்டிக் கடல் குழாய் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம ட்ரோன் பறப்புகள் அவதானிக்கப்பட்டிருப்பது அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ட்ரோன்கள் எங்கே, எப்போது அவதானிக்கப்பட்டன என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பால்டிக் கடலில் நோட் ஸ்ட்ரீம் குழாய்களில் மர்மமான வெடிப்பு நிகழந்திருப்பதை அடுத்து நோர்வேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகிய Equinor நாட்டில் உள்ள அதன் எரிசக்தி நிலையங்களது பாதுகாப்பு அளவை அதிகரித்திருக்கிறது. அதேசமயம் பால்டிக் கடல் ஊடாகச் செல்லுகின்ற நோர்வேயின் எரிவாயுக் குழாய்கள் தொடர்பில் கவலை எழுந்துள்ளது.

நிலைமையின் விரிவாக்கத்தைப் பொறுத்து நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்கு நேட்டோவின் உதவி கோரப்படலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை என்று நோர்வே பாதுகாப்பு அமைச்சர் பியோன் ஆறில்ட் கிராம் (Bjørn Arild Gram) தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, வட கடலில் உள்ள டெனிஷ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்கள் மீதும் (Halfdan B) புதன்கிழமை அனுமதிக்கப்படாத ட்ரோன்கள் பறந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தாஸ்நியூஸ் - பாரிஸ்.