பொன்னியின் செல்வன்: எழுத்தில் இருந்து திரைக்கு..!

Sri Lanka 1 வருடம் முன்

banner
எழுத்து - சியாமளா யோகேஸ்வரன்

காலத்தால் அழியாத ஒரு தமிழ்க்காவியமாக, வாசித்தவர்களின் மனதில் இலக்கியத்துக்கு இலக்கணம் சொல்லும் விதமாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு நாவல்தான் “பொன்னியின் செல்வன்”. சோழரின் வீரத்தையும், அந்த ராஜாங்கத்தின் செழிப்பையும் கல்கி தன் எழுத்தாணி கொண்டு அணுஅணுவாகச் செதுக்கியிருந்தார். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்கியால் வடிக்கப்பட்ட ஒரு சோழகாவியம் இன்றைக்கும் உயிருள்ளதாக, வாசிப்பவர்களுக்கு காவிய நாயகர்களுடன் சேர்ந்து பயணிப்பதான ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றது என்றால் அந்த எழுத்துக்களில் உள்ள வலிமையை வார்த்தைகளில் சாதாரணமாக வடித்து விட முடியாது.

புத்தகத்தைக் கையில் எடுத்து விட்டால் வந்தியத்தேவனுடன் சேர்ந்து நாமும் குதிரையில் பயணிப்போம். கடல்பயணங்களில் அலை நடுவே நாமும் அல்லாடுவோம். காதலை அணுஅணுவாக நாமும் ரசித்து அந்த வலியுடனே நாமும் அலைவோம். அந்த உணர்வுகளை எமக்குள் ஏற்படுத்திய அந்த எழுத்தின் வலிமை அளப்பரியது.

ஐந்து பாகங்கள் கொண்ட கதையின் முதல் இரண்டு பாகத்தையும் மூன்று மணி நேரத்துள் சினிமாவாக இயக்குநர் மணிரத்தினம் எடுக்க முயன்றிருக்கின்றார். அருள்மொழிவர்மரும் வந்தியத்தேவனும் சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டதுடன் பாகம் ஒன்று முடிவடைந்திருக்கின்றது. இந்த மூன்று மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் உட்பட சினிமாவுக்கென்றே இருக்கக்கூடிய மசாலாக்களில் எதுவுமே விட்டுப் போகவில்லை. ஆனாலும் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரைச் சொல்லி நிற்கும் இசை ரசிக்க வைக்கின்றது.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாசித்தவர்களுக்கு மட்டுமே, இந்தப் படத்தின் கதை புரிந்திருக்கும். பார்க்காதவர்களுக்கு தலையும் காலும் புரியாத ஒரு உணர்வே இருந்திருக்கும். ஏனென்றால் கதாபாத்திரங்கள் எதுவுமே இன்னார்தான் இவர்கள் என்று தெளிபடுத்தப்படவில்லை. அதிகளவிலான கதாபாத்திரங்களில் சோழர் யார், பாண்டியர் யார், பல்லவர் யார் என்ற கேள்விகளுடன், இவர்களுக்குள் என்ன தொடர்பு என்பது கூடப்புரியாமல் ரசிகர்கள் குழம்பி, ஓரளவுக்குத் தெளிவு பெறும் வேளையில் படம் முற்றுப் பெற்று விட்டிருக்கும்.

துடுக்கான வந்தியத்தேவனின் பேச்சும், விளையாட்டுத்தனமான அவன் போக்கும், வீரம் செறிந்த அவனது போர் அனுபவங்களும், ராஜவிசுவாசமும் கொண்ட புதினத்தின் நாயகனாக , புத்தகத்தில் வாசித்திருந்த வந்தியத்தேவரின் உருவத்தை கார்த்தியின் நடிப்பு கண் முன்னால் கொண்டு வந்திருக்கின்றது என்பதை மறுதலிக்க முடியாது.

நாவலில் குந்தவைப்பிராட்டியின் சகோதரப்பாசத்தையும். பொறுப்பு மிக்க பெண்ணாகவும் இருந்து அரசகுடும்பத்தை வழி நடத்திய பக்குவத்தையும், அவர் எடுத்திருந்த சமயோசிதமான ராஜதந்திர முடிவுகளையும் பார்த்து அந்தக் காலத்தில் கூட ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற பெருமிதமான உணர்வைப் பெற்றிருக்கின்றோம். திரிஷாவின் உருவம் குந்தவையின் பாத்திரத்துடன் பொருந்தினாலும் அந்தப்பாத்திரத்துக்கான அழுத்தத்தை கதாசிரியரும் இயக்குநரும் கொடுக்கத் தவறி விட்டார்களோ என்ற உணர்வு எழாமல் இல்லை.

பேரழகியான நந்தினிக்கு ஏற்றதாக உலகப்பேரழகி ஐஸ்வர்யாவைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறுமில்லை. ஆனாலும் இந்தக் கதைக்கே ஆணிவேராக இருக்கக் கூடிய எதிர்மறையான கதாபாத்திரத்துக்கு அவர் பொருந்தவில்லையோ என்று தோன்றியது. அதே போல் தான் போர்வெறி கொண்டு வாழும் ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரத்தில் விக்ரமைப் பார்க்கும் போது சட்டென்று அந்நியன் படம் ஞாபகத்துக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அவரின் நிஜக்குணமும், தன்மையும் சரியாகக் காண்பிப்பதற்கு விக்ரமை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

தீவிர வைணவபக்தனான ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கற்பனை நகைச்சுவைப் பாத்திரம் நாவல் முழுவதிலும் பயணித்து எம்மை புத்தகத்துடன் பிணைத்து வைத்திருந்தது. படத்திலும் தொப்பையும், மொட்டையும் கூடிய உருவமாக ஜெயராமின் உடல் சொல்லும் நகைச்சுவை சங்கதி கூட எம்மை ரசிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

காவியம் ஒன்று எழுத்து வடிவில் பிரசுரமாகும் போது, வர்ணனைகளால் அந்தக் காட்சியை கண் முன்னே கொண்டு வந்து விடலாம். எழுத்துடன் ஒன்றிப்போய் வாசித்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் எம் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் படப்பிடிப்பு என்று வரும் போது கதைவசனங்களாலும் முகபாவங்களாலும் வடிக்கப்படக் கூடியவை ஒரு எல்லைக்குள்ளேயே நின்று விட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அதனாலோ என்னமோ திரைப்படமாகப் பார்க்கும் போது, நாவலாக வாசித்த போது ஏற்பட்ட தாக்கம் எழவில்லை என்பது ஒரு விதமான ஏமாற்றத்தையே கொடுத்தது.

காட்சி அமைப்புகளில் இருந்த கவனம் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படவில்லையோ அல்லது வழமையான பாணியை மாற்றியமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையோ என்னமோ தெரியவில்லை. கதாபாத்திரங்களின் பேச்சில் கூட அரசகுல அங்கத்தவர்களுக்கே இருக்கக் கூடிய கம்பீரமோ அல்லது நாம் ரசிக்கும் அந்த ராஜ தோரணையோ இல்லாமல் ஒரு சாதாரண குடும்பப்படம் பார்ப்பது போன்றதான உணர்வே இருந்தது. பாகுபலி படத்தைப் பார்த்தபோது அதன் பிரமாண்டமும், தமிழ் கம்பீரமாகத் தவழ்ந்து வந்தவிதமும் உண்மைக்கதை போன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்க, உண்மைக் காவியமான பொன்னியின் செல்வனின் திரைக்கதை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டதோ என்று தோன்றியது.

ஆனாலும் இலங்கையில் தம்புள்ள என்ற இடமாகட்டும், மகிந்தன் ஆண்ட தலதா மாளிகை போன்று காட்டப்பட்ட இடமாகட்டும்,புத்தபிக்குகளின் நடமாட்டமாகட்டும் அத்தனையும் நிஜ இலங்கையைக் கண் முன்னால் கொண்டு வந்தன என்று தான் சொல்ல வேண்டும்.
இறுதிக் காட்சியாக சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்ட வந்தியத்தேவனை பொன்னியின் செல்வர் மீட்க வந்த காட்சியில், ஆழியலைகளின் உக்கிரமான எழுச்சியும், மீட்புப்போராட்டமும் பிரமாண்டமாகவே இருந்தன. ஆனால் கல்கியின் புத்தகத்தில் அராபியக் கப்பலில் இளவரசர் செல்கின்றார் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற வந்தியத் தேவன் பகைவர்களிடம் சிக்கி,பின்னர் தன்னந்தனியனாக சுழிக்காற்றில் அகப்பட்டிருக்க நண்பனைக் காப்பாற்ற என்று இளவரசர் இறுதியாகக் களமிறங்குகின்றார். அப்போது சண்டைகள் எதுவும் நடந்ததாக கல்கி உரைக்கவில்லை.

ஆனால் திரைப்படத்தில் பாய்மரக் கப்பலில் உச்சியில் கட்டுண்டிருக்கும் வந்தியத்தேவனை , பகைவர்களை வீழ்த்தி பொன்னியின் செல்வர் எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதாக ஒரு சண்டைக்காட்சிக்கு இடம் கொடுத்தே படம் நகர்கின்றது.

கல்கியின் புதினத்தை படமாக எடுக்கின்றேன் என்று அதில் எந்த மாற்றத்தையோ அல்லது சிதைவையோ ஏற்படுத்தினால் அதனை வாசகர்கள் எந்தக் காலத்திலும் மன்னிக்கப் போவதில்லை. இத்தனை காலமாக அந்த விஷப்பரீட்சையை சந்திக்கும் தைரியம் மூத்த நடிகர்கள் யாருக்குமோ அல்லது மூத்த இயக்குநர்கள் யாருக்குமோ வந்திருக்கவில்லை. மணிரத்தினம் சிறந்த நடிகர்களை எல்லாம் ஒன்று திரட்டி யாரும் செய்திராத ஒரு முயற்சியைச் செய்திருக்கின்றார். அதற்காக அவரை நிச்சயமாகப் பாராட்டலாம். எந்த ஒரு சரித்திரக்கதையும் சரித்திரத்தின் சத்தியமான நிகழ்வுகளைச் சுற்றி கதாசிரியரின் கற்பனையுடன் கலந்தே காவியமாகின்றது. வாசகர்களும் அதுவே சரித்திரத்திலும் நடந்திருக்கக் கூடும் என்று ஏற்றுக் கொண்டும் விடுகிறார்கள். ஐந்து பாகங்களில் அழகாக வடிக்கப்பட்ட ஒரு புதினத்தில் வாழ்ந்த கதாபாத்திரங்களுக்கு மூன்று மணி நேரத்தில் நடிகர்கள் உயிர் கொடுத்து வார்த்தைகளில் தம் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கல்கியின் காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுக் காவியத்துக்கு நியாயம் செய்து விட முடியுமா என்பது தான் எம்முன்னால் இப்போது பிரமாண்டமாக எழுந்திருக்கும் ஒரு கேள்வி.

இன்றும் பலரின் மனதில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கல்கியின் கதாபாத்திரங்களைப் படம் மூலம் கொன்று புதைத்து விடுவார்களோ என்ற அச்சம் படத்தைப் பார்க்க முன்னர் இருந்தது என்னமோ உண்மைதான். அதிலும் இந்தப் படத்தின் இயக்குநர், தமிழ் நாட்டு மக்களிடையே கதாநாயகனாக வாழ்ந்து வந்த எம்ஜிஆர் என்ற உத்தம மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்ததும் அது அவரின் நிஜத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதும் ஒரு குறையாக இருக்கும் வேளையில், ஒப்பற்ற சோழவரலாற்றுக்கு சரியான ஒலி ,ஒளி வடிவத்தை அவரால் கொடுத்து விட முடியுமா என்ற சந்தேகம் இருந்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை.

தொழினுட்பம் ஆட்சி செய்யும் இந்தக் காலத்தில் அடுத்த சந்ததியினரிடையே புத்தகங்களை வாசிக்கும் தன்மை குறைந்து கொண்டே செல்கின்றது. தமிழரின் வீரத்துக்குச் சான்றான கடாரம் வென்ற சோழனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே தற்போதைய சந்ததியினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம்மாதிரியான திரைப்படங்கள் அந்த வரலாற்றை ஒரு படவடிவில் கொண்டு வந்து தமிழரின் பாரம்பரியத்தையும் வீரவரலாற்றையும் வெளிப்படுத்துவதன் மூலம் தமிழரின் பெருமையை வெளிக்கொணர்கிறது எனுமளவில் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். அதுமட்டுமல்லாமல் கல்கியின் நாவலைப் படிக்காதவர்களுக்கு புத்தகத்தை ஒரு தரம் வாசிக்க வேண்டும் அல்லது ஒலிவடிவமாகவாது கேட்க வேண்டும் என்ற உந்துதலை இந்தப் படம் ஏற்படுத்தும் என்றால் அதுவே திரைப்படத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிதான்.