இந்தியாவின் தலையீடு அவசியம் - சிவசக்தி ஆனந்தன்

Politics 3 ஆண்டுகள் முன்

banner

இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது. 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதிலிருந்து அதனை மேம்படுத்தி அரசியல் தீர்வொன்றை நிலைபெறச்செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.





இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,





இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர்.





அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமாப்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச் சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.





விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.





ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை. அதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரண அடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்துகொண்டு இருக்கின்றது.





அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம்.





இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-, இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் பேராபத்தே உள்ளது.