தமிழ் அரசியல்வாதிகள்மீது சீறிப்பாயும் சரத் வீரசேகர!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

சில தமிழ் எம்.பிக்கள் சிங்கள இனத்தவர்களுக்கு எதிராக குரோதத்தை தூண்டும் கருத்துக்களை அடிக்கடி கூறுகின்றனர். சிங்கள இனத்திற்கும், இராணுவத்திற்கும் எதிராகவே பேசுகின்றனர். தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு எதிராக தூண்டும் கருத்துக்களை வெளியிடும் சகலருக்கும் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், பயங்கரவாதம் மீண்டும் உருவானால் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீங்களே என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார்.





அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,





'சுபீட்சமான நோக்கு' வேலைத்திட்டத்தில் பிரதானமானது தேசிய பாதுகாப்பே ஆகும். பயம், சந்தேகமின்றி வாழ்வதே தேசியப் பாதுகாப்பாகும். நாட்டின் முதுகெலும்பாக தேசிய பாதுகாப்பே இருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் அதுபற்றி தேடுவதல்ல. அதற்கு முன்னரே புலனாய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தேசியப் பாதுகாப்பாக உள்ளது.





நல்லாட்சி அரசாங்கத்தில் புலனாய்வு துறையை காட்டிக்கொடுக்க நடவடிக்கையெடுத்த காரணத்தினாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறான தாக்குதல்களுக்கு இடமளிக்காது புலனாய்வு துறையை பலப்படுத்தியுள்ளது.





நாங்கள் பாதாள குழுவை ஒழிப்பதுடன், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு தலைதூக்க இடமளிக்க மாட்டோம். யுத்தத்தினால் 29,000 இராணுவத்தினர் இறந்ததுடன் 18,000 பேர் அங்கவீனர்களாகியுள்ளனர்.





இந்நிலையில் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கும் சில தமிழ் எம்.பிக்கள் சிங்கள இனத்தவர்களுக்கு எதிராக குரோதத்தை தூண்டும் கருத்துக்களை அடிக்கடி கூறுகின்றனர். தமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக கதைக்காது எப்போதும் சிங்கள இனத்திற்கும், இராணுவத்திற்கும் எதிராகவே கதைக்கின்றனர்.





அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த இவ்வாறான தேசத்துரோக, பிரிவினைவாத குரோதத்தனத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளின் கருத்துக்களே காரணமாகும்.





நாங்கள் இரண்டு இலட்சத்து 95 ஆயிரம் மக்களை மீட்டெடுத்தே யுத்தத்தில் வெற்றிப்பெற்றோம். உலகில் இந்தளவு பணயக் கைதிகளை மீட்ட ஒரே சந்தர்ப்பமாகவே இதனை உலக நாடுகள் கூறுகின்றன.





இப்போது கதைக்கும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் அப்போது தமிழ் மக்களுக்கு உதவ வரவில்லை. தமிழ் மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக இவர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பாகவோ, மனித உரிமைகள் தொடர்பாக கதைப்பதற்கோ உரிமையில்லை." - என்றார்.