'உள்ளக பொறிமுறையை நிராகரித்தால் சர்வதேச விசாரணை உறுதி'

banner

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கையால் ஒருதலைபட்சமாக விலகமுடியாது. எனவே, உள்ளக விசாரணை பொறிமுறைக்கு உடன்படாவிட்டால் சர்வதேச விசாரணையை தடுக்கமுடியாமல்போய்விடும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இணைந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டார்.சர்வதேச சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும், உள்ளக விசாரணை நடத்தப்படும் எனவும் அதன்மூலம் உறுதியளித்தார். நாடாளுமன்றத்தைக்கூட்டி ஆலோசனை பெற்றிருந்தால் அதனை நாம் நிராகரித்திருப்போம்.அவ்வாறு செய்யாமல் மஹிந்த தன்னிச்சையாக முடிவெடுத்தார். அந்த தீர்மானமே இன்று இலங்கையின் கழுத்தை இறுக்கியுள்ளது. 





இலங்கைக்கு மூன்றாண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஐ.நா. செயலாளருக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாததாலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2015 மார்ச்சில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படவிருந்தது. இதன்காரணமாகவே 2 வருடங்கள் எஞ்சியிருக்கையில் முன்கூட்டியே மஹிந்த ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.





அத்தேர்தலில் நாம் வெற்றிபெற்ற பின்னர், பொருளாதாரத்தடை மற்றும் சர்வதேச விசாரணையை தடுக்கும் நோக்கில் உள்ளக விசாரணைக்கு இணங்கினோம். அதுதான் அந்த இணை அனுசரணை. உள்ளக விசாரணையை நிராகரித்திருந்தால் சர்வதேச விசாரணை நிச்சயம் நடத்திருக்கும். 





இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகிவிட்டதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. அவ்வாறு ஒரு தலைபட்சமாக விலகமுடியாது. விளக்கமளிக்கலாம். ஆனால் விலகுவது என்பது சாத்தியமற்றதாகும். எனவே, உள்ளக விசாரணையை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணையை தடுக்கமுடியாமல்போய்விடும்.





அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சிஇருக்கும்போதுதான் இலங்கைக்கு தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் டரம்ப் வந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியது. தற்போது ஜே பைடன் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா மீண்டும் வரும். முரண்பட்டால் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைமை உருவாகும்." - என்றார்.