'அழுத்தங்கள்மூலம் உணர்வுகளை அழிக்க முடியாது'

banner

" அரசாங்கத்தின் அழுத்தங்கள்மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளை ஒருபோதும் அழிக்கமுடியாது. உயிரிழந்தவர்களை நிச்சயம் நினைவுகூருவோம்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" இறந்தவர்களை நினைவுகூருவதென்பது எமது மரபாகும். பண்டார வன்னியனுக்கான நினைவுகூரல்கூட அவருக்கான நாளில் இடம்பெறுகின்றது. எனினும், இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வை இந்த அரசாங்கம் தடுத்துள்ளது. பொலிஸாருக்கு அழுத்தங்கள் பிரயோகித்து நீதிமன்றங்கள் ஊடாக தடைஉத்தரவு பெறப்பட்டுள்ளது.





போராளியாக இருக்கலாம், பொது மக்களாக இருக்கலாம், அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு இருக்கின்றது.





எனினும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஏன் அரசாங்கம் அவசர அவசரமாக நிறுத்த வேண்டும்? சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அதிகாரிகளை அனுப்பி இதனை தடைசெய்வதன் நோக்கம் என்ன?  





வடக்கு, கிழக்குக்கு வெளியில் எமது மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அரசின் அழுத்தங்களால் எங்கள் உணர்வுகளை ஒருபோதும் அழிக்கமுடியாது." - என்றார்.