முஸ்லிம் மக்கள் இலங்கையைவிட்டு வெளியேறும் அபாயம்!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

போரால்  உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு பொதுவானதொரு தினம் அறிவிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சுமீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" இலங்கையில் இனங்களுக்கிடையில் இருந்த முரண்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை முன்நோக்கி கொண்டுசெல்லமுடியாத நிலை ஏற்பட்டது. 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டதால் பிரதான தமிழ் வர்த்தகர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். அதன்பின்னர் 3 சகாப்தகால போராலும் பொருளாதாரம்   பாதிக்கப்பட்டது.
போர் முடிவடைந்த பின்னர்கூட அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு முன்னோக்கி பயணிக்கமுடியாதநிலைதான் நீடிக்கின்றது.





குறிப்பாக போர் முடிவடைந்திருந்தாலும் இனப்பிரச்சினை தீரவில்லை. நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின்போது முன்வைக்கப்படும் கருத்துகள்மூலமும் இது உறுதியாகின்றது. இவற்றை செவிமடுத்துக்கொண்டிருக்கும் தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுபெறும்.





உயிரிழந்தவர்களை நினைவுகூருவது தொடர்பில் கடந்தவாரம் கருத்தாடல் உருவாகியிருந்தது. போரால் எனது குடும்பத்தை சேர்ந்த மூவரும் இராணுவத்தில் இருந்து உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களுக்கும் இருக்கவேண்டும்.  அதற்கான நிகழ்வை பிரபாகரனின் பிறந்தநாளிலோ அல்லது முதலாவது புலி உறுப்பினர் உயிரிழந்த நாளிலோ நடத்தவேண்டியதில்லை. போரால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூருவதற்கு பொதுவானதொரு நாள் பிரகடனப்படுத்தப்படவேண்டும். 





இராணுவத்தினராக இருக்கலாம் , சாதாரண சிவில் மக்களாக இருக்கலாம்  அதேபோல தமிழ் மக்கள் சார்பில் புலி உறுப்பினர்களாக இருக்கலாம், சாதாரண சிவில் மக்களாக இருக்கலாம்   இவ்வாறு போரால் உயிரிழந்த அனைவரையும் ஒரு நாளில் ஏன் நினைவுகூரமுடியாமல் உள்ளது? இனியும் இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது என்ற பிரார்த்தனையையும் அந்நாளில் நடத்தலாம். அரசியல் காரணமாகவே இதனை செய்யமுடியாமல் உள்ளது.  





தமிழ் மக்களுடன் பிரச்சினைகள் இருந்ததுபோல அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்களுடனும் பிரச்சினைகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டன. அரசியல் இலாபம் தேடுவதற்காகவே முஸ்லிம் மக்களுடன் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. கருத்தடை மாத்திரை, கருத்தடை உணவு போன்ற கதைகள் தற்போது காணாமல்போயுள்ளன. அரசியலுக்காக இவ்வாறு இனத்தையும், மதத்தையும் பயன்படுத்துவது எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 





பிரச்சினைகளால் தமிழ் மக்கள் அன்று நாட்டைவிட்டு சென்றனர். முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால் அம்மக்களும் அந்நாட்டைவிட்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதால் சிங்கள மக்கள்மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது." - என்றார்.